அமைச்சர்கள் வீட்டு பிள்ளைகள் படிப்பது மும்மொழிதான்; அவர்கள் அறிவில்லாதவர்களா? - அண்ணாமலை கேள்வி

தூத்துக்குடி, மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "தேசிய கல்விக் கொள்கை முதல்முறையாக 1968ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மும்மொழிக் கொள்கையை 57 ஆண்டுகளாகியும் முறையாக அமல்படுத்த முடியவில்லை. இருக்கின்ற நிதியை வைத்து எப்படி சிறப்பான கல்வியை வழங்குவது என்பதே மாநில அரசின் இலக்காக இருக்கிறது.தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையை சிறப்பாக பின்பற்றும்போது திடீரென மும்மொழிக் கொள்கைக்கு மாற வேண்டும் என்றால், அறிவுள்ளவர்கள் யாராவது ஏற்றுக் கொள்வார்களா..? சில மாநிலங்களில் ஒரு மொழிக் கொள்கையைக்கூட நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது. சக்சஸான மாடலை எடுத்துவிட்டு, பெயிலியரான மாடலைப் பின்பற்ற வேண்டும் என்று சொன்னால் அறிவுள்ளவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையே இந்தி தெரியாது என சொல்கிறார். அதனால் ஏதாவது பிரச்சனை வந்ததா? அவருக்கு ஏதாவது பாதிப்பு வந்ததா?. கல்வியில் தேசிய சராசரியை விட தமிழகத்தில் சராசரி அதிக அளவில் உள்ளது. வட மாநிலங்களில் இருமொழி கொள்கையை அமல்படுத்தியிருந்தால் 3-வது மொழி தேவைப்படாது. இருமொழி கொள்கையை கூட அமல்படுத்த முடியாதவர்கள் நம்மை 3-வது மொழி கற்க சொல்கின்றனர்." என்று அவர் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "அவரது மகன் இந்தியக் குடிமகனா..? அல்லது அமெரிக்க குடிமகனா..? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் மகன் மூன்று மொழி சொல்லிக் கொடுக்கக்கூடிய பள்ளியில்தான் படிக்கிறார். அதனால் பி.டி.ஆருக்குத்தானே அறிவில்லை என்று அர்த்தம். தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களின் குழந்தைகள், பேரக்குழந்தைகள் மூன்று மொழி சொல்லிக் கொடுக்கக்கூடிய பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். தமிழகத்தில் தமிழ் மொழியை விட ஆங்கில மீடியத்தில்தான் அதிகமாக படிக்கிறார்கள்.இதனால் தமிழ் மீடியம் 27 சதவிகிதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. ஆனால், தேசிய கல்விக் கொள்கையில் தமிழ் மொழியை ஊக்குவிக்கிறோம். அமைச்சர்கள் அன்பில் மகேஸ், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் இது குறித்து சிந்திக்காதது ஏன்..?" என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
மூலக்கதை
