நிலத்தகராறில் நடிகை சவுந்தர்யா கொலையா..? - கணவர் அளித்த விளக்கம் என்ன?

ஐதராபாத்,தென்னிந்திய சினிமாவில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சவுந்தர்யா. இவர் கடந்த 2004-ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். ஊடகங்கள் வெளியிட்ட செய்தியின் படி அவர் பா.ஜ.க., தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக கரீம்நகருக்கு விமானம் மூலம் வந்த போதுதான் இந்த விபத்து நடந்ததாக சொல்லப்பட்டது. இந்த விபத்து சம்பவத்தில் சவுந்தர்யாவின் உடல் கிடைக்கவில்லை. சிறப்பான நடிப்பு திறன் உள்ள நடிகை இறந்த சம்பவத்தால் அவரது ரசிகர்கள் வேதனை அடைந்தனர்.இந்நிலையில், சவுந்தர்யாவின் மரணம் விபத்தல்ல .. கொலை என்று ஆந்திராவை சேர்ந்த சிட்டிமல்லு என்பவர் காவல் நிலையத்திலும், மாவட்ட கலெக்டரிமும் புகார் மனு அளித்திருந்தார். இதுதொடர்பான அந்த மனுவில், 'நடிகை சவுந்தர்யாவின் மரணம் விபத்தல்ல. சவுந்தர்யாவுக்கு ஜல்பள்ளி கிராமத்தில் 6 ஏக்கர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தை வாங்க மோகன் பாபு முயற்சித்திருக்கிறார். ஆனால் அந்த நிலத்தை விற்பனை செய்ய சவுந்தர்யாவின் சகோதரர் அமர்நாத் மறுத்திருக்கிறார். இந்த நிலையில் சவுந்தர்யாவின் மரணத்திற்கு பிறகும் அந்த நிலத்தை விற்பனை செய்யுமாறு அமர்நாத்திற்கு அழுத்தம் கொடுத்த மோகன் பாபு அந்த நிலத்தில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கிறார். எனவே இந்த நிலத்தை மீட்டு ஆதரவற்றோர், ராணுவத்தினர் ஆகியோரின் நலனுக்கு வழங்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் நடிகை சவுந்தர்யாவின் மரணம் குறித்து அவரது கணவர் ரகு விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதிப்பிற்குரிய நண்பர்களே.. கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் உள்ள நடிகர் மோகன் பாபு மற்றும் என் மனைவி நடிகை சவுந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது. சொத்து தொடர்பாக பரவி வரும் அந்த ஆதாரமற்ற செய்தியை நான் மறுக்கவும், தெளிவுபடுத்தவும் விரும்புகிறேன். நடிகர் மோகன் பாபு, என் மனைவி மறைந்த சவுந்தர்யாவிடம் இருந்து சட்டவிரோதமாக எந்த சொத்தும் வாங்கவில்லை என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன். எனக்குத் தெரிந்தவரை அவருடன் நாங்கள் எந்த நில பரிவர்த்தனையும் செய்யவில்லை. கடந்த 25 வருடங்களாக மோகன் பாபுவை நான் அறிவேன். நாங்கள் வலுவான மற்றும் நல்ல நட்பைப் பகிர்ந்து கொண்டுள்ளோம். அவருடன் எங்கள் குடும்பங்கள், என் மனைவி, என் மாமியார் மற்றும் மைத்துனர் எப்போதும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையின் ஆழமான பிணைப்பைப் பேணி வருகின்றனர். இந்த நேரத்தில் மோகன் பாபுவுடன் எங்களுக்கு எந்த சொத்து பரிவர்த்தனையும் இல்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்த விரும்புகிறேன். இது ஒரு தவறான செய்தி என்பதால், தவறான செய்தியை பரப்புவதை நிறுத்துமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என்று அதில் நடிகை சவுந்தர்யாவின் கணவர் ரகு தெரிவித்துள்ளார்.
மூலக்கதை
