சொன்னபடி நடந்து கொண்டாரா பிரதமர் மோடி..?: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி

  தினத்தந்தி
சொன்னபடி நடந்து கொண்டாரா பிரதமர் மோடி..?: முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 5-ம் தேதி நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழக அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் பா.ஜ.க. அரசின் அநீதியை மக்களிடம் கொண்டு சென்று, அதன் பேராபத்தை எடுத்துக் கூற வேண்டும் என்றும், தொகுதி மறுசீரமைப்பினால் பாதிக்கப்படப் போகும் மாநிலங்களை ஒன்றிணைத்து கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைத்திட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதன்படி, தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. சார்பில் இன்று மத்திய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பைக் கண்டித்து மக்களிடம் எடுத்து கூறும் விதமாக "தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!" எனும் தலைப்பில் மாநிலம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என தி.மு.க. அறிவித்தது. இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிராக திருவள்ளூரில் நடைபெற்று வரும் கண்டன பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், "வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும். மத்திய அரசிடம் பணிந்து செல்லும் முதுகெலும்பு அல்லாதவர்கள் அல்ல நாம்.. வாதாடியும், போராடியும் நமது உரிமைகளை நிலைநாட்டுவோம். மத்திய அரசு அனைத்து வகையிலும் நமக்கு தடைக்கல்லை போட்டு வருகிறது.நம் மொழி, நிலத்தை கெடுக்கின்ற எதிரிகள் எவராக இருப்பினும் துணிவுடன் எதிர்கொள்வோம். இப்படைத் தோற்கின், எப்படை வெல்லும் என்று ஒன்றிய ஆட்சியாளர்களை நோக்கி கேட்கின்ற வகையில் தமிழினம் திரண்டுள்ளது.தொழிற்கல்வி என்ற பெயரில் குலக்கல்வியை அறிமுகப்படுத்த பார்க்கிறார்கள். NEPயை ஏற்றால் கலைக்கல்லூரி சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு நடத்துவார்கள். முந்தைய 10 ஆண்டுகால ஆட்சியாளர்களால் தமிழ்நாட்டின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டது. வளைந்த முதுகோடு தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியின் காலடியில் அடகுவைத்த அவலம் நடந்தது. ஆனால் இப்போது . திமுக ஆட்சியின் எண்ணற்ற திட்டங்களால் தமிழ்நாட்டை இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது. அதிகாரப் பகிர்வுக்கு வழிகாட்டுவதே எனது அணுகுமுறையாக இருக்குமென பிரதமர் மோடி கூறியிருந்தார். மாநிலங்களின் பிரச்னை எனக்குத் தெரியும் என்று பிரதமர் கூறினாரே.. அப்படி நடந்தாரா?. பிரதமர் மோடி தாம் கூறியதுபோல கடந்த 10 ஆண்டுகளில் நடந்து கொண்டிருக்கிறாரா?.ஒரு மாநில அரசு நாட்டிற்கே எடுத்துக்காட்டாக இருந்தால், அந்த மாநில அரசுக்கு துணை நிற்க வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால், பாஜக அரசு தமிழ்நாடு தலைநிமிர்ந்து நடைபோடுகிறதே என்ற பொறாமையோடு செயல்படுகிறது. தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் திமுக காவலாக இருக்கிறதே என்ற எரிச்சலோடு உள்ளது. மத்திய அரசு நம்மை சிறுமைப்படுத்தப் பார்க்கிறது. பதவி சுகத்திற்காக மத்தியய அரசிடம் பணிந்து போகும் முதுகெலும்பில்லாத அடிமைக் கூட்டமல்ல நாம். தமிழ்நாடு என்ன பிச்சைக்கார மாநிலமா?.. நாங்கள் உழைத்து, வரியை செலுத்திய பணத்தில் இருந்து எங்களுக்கான நிதியை தருவதில் என்ன பிரச்னை? மாணவர்களின் நலனுக்கான நிதியை கொடுக்காமல் இருப்பது நியாயமா?" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி எழுப்பினார்.

மூலக்கதை