உக்ரைனின் கட்டுப்பாட்டில் இருந்த மிகப்பெரிய நகரத்தை மீண்டும் கைப்பற்றிய ரஷியா

மாஸ்கோ, உக்ரைன் -ரஷியா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முயற்சித்து வருகிறார். அதேவேளை, போர் நிறுத்த உடன்பாட்டிற்கு வர உக்ரைனுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அந்நாட்டிற்கு வழங்கி வந்த ராணுவ உதவி, உளவு தகவல்களை அமெரிக்கா நிறுத்தியது. மேலும், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன், அமெரிக்கா ஆகிய நாடுகள் சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அந்த வகையில் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் ரஷியா உடனான போரை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது. தற்காலிக போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் சம்மதம் தெரிவித்ததையடுத்து அந்நாட்டிற்கு நிறுத்தி வைக்கப்பட்ட ராணுவ உதவி, உளவு தகவல்களை மீண்டும் வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்தது.இதனிடையே 30 நாள் போர்நிறுத்தம் திட்டத்திற்கு உக்ரைன் ஒப்புக்கொண்டாலும், ரஷியா அந்த திட்டத்தை இன்னும் ஆய்வு செய்து வருவதாகவும், இந்தத் திட்டம் குறித்து அமெரிக்காவிடமிருந்து விளக்கத்திற்காகக் காத்திருப்பதாகவும் ரஷியா தரப்பில் கூறப்பட்டுள்ளது. புதின்- டிரம்ப் இடையிலான பேச்சுவார்தை நடைபெற விரைவாக ஏற்பாடு செய்யப்படும் என ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 2024ம் ஆண்டு எதிர்பாராத எல்லை தாண்டிய தாக்குதலுக்குப் பிறகு உக்ரைன் ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட குர்ஸ்க் பிராந்தியத்தின் மிகப்பெரிய நகரமான சுட்ஜாவை கைப்பற்றி உள்ளதாக ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. குர்ஸ்க் பிராந்தியத்தில் தங்கள் கடைசி நிலையிலிருந்து உக்ரைன் ராணுவ வீரர்களை விரட்டியடிக்க, ரஷிய ராணுவம் நெருங்கி உள்ளநிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பிராந்தியத்தில் உள்ள ராணுவத் தலைமையகத்திற்குச் சென்று அங்குள்ள ராணுவத் தளபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மூலக்கதை
