கச்சத்தீவு ஆலய திருவிழா: பாதுகாப்பு வளையத்தில் ராமேஸ்வரம் கடற்பகுதி

  தினத்தந்தி
கச்சத்தீவு ஆலய திருவிழா: பாதுகாப்பு வளையத்தில் ராமேஸ்வரம் கடற்பகுதி

ராமேஸ்வரம், இந்திய - இலங்கை பக்தர்களின் பாரம்பரிய உறவுத் திருவிழாவாகக் கருதப்படும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா இன்று மற்றும் நாளை (மார்ச் 14, 15) நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்க இந்திய பக்தர்களுக்கு இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மறைமாவட்ட பிஷப் அழைப்பு விடுத்தார். முதல் நாளான இன்று மாலை 5 மணி அளவில் ஆலயத்தின் முன்புள்ள கொடிமரத்தில் நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன், ராமேஸ்வரம் வேர்க்கோடு பங்குத்தந்தை அசோக் வினோ ஆகியோர் அந்தோணியாரின் உருவம் பதித்த கொடியை ஏற்றுகின்றனர்.தொடர்ந்து ஆலயத்தை சுற்றி சிலுவைப்பாதை திருப்பலி நடக்கிறது. இரவு 8 மணிக்கு அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரை இலங்கை கடற்படையினருடன் இருநாட்டினரும் சுமந்து, ஆலயத்தை சுற்றி தேர் பவனி நடைபெறுகிறது.நாளை காலை 7 மணி அளவில் இலங்கை யாழ்ப்பாணம் மறை மாவட்ட பிஷப், இந்தியாவின் சார்பில் சிவகங்கை மாவட்ட பிஷப் லூர்து ஆனந்தம் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது.இந்த திருவிழாவை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் இருந்து இன்று 100 படகுகளில் சுமார் 3 ஆயிரம் பேர் கச்சத்தீவு செல்கின்றனர். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் உத்தரவின் பேரில் கச்சத்தீவு செல்பவர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாவை முன்னிட்டு இந்திய கடற்பகுதியில் கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் கண்காணிப்பை தீவிரப்படு்த்தி உள்ளனர்.குறிப்பாக கச்சத்தீவு அருகே உள்ள இந்திய எல்லைப்பகுதியில் சென்னையில் இருந்து வந்த கடற்படை அதிவேக ரோந்து கப்பல் மற்றும் இந்திய கடலோர காவல் படை கப்பல் கண்காணித்து வருகின்றன. மேலும் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான 5 கப்பல்களும் இரவு, பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ்.பருந்து கடற்படை விமான தளத்தில் இருந்து 2 ஹெலிகாப்டர்களும், டார்னியர் விமானமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. கடலோர பாதுகாப்பு போலீசாரும் பைபர் படகுகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு ராமேஸ்வரம் கடல் பகுதி முழுமையாக பாதுகாப்பு வளையத்தில் உள்ளது.ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக படகுகள் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை அதிகமாக இருந்ததால் கடந்த ஆண்டு நடைபெற்ற கச்சத்தீவு ஆலய திருவிழாவில் தமிழகத்தில் இருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை