கோவை-பாலக்காடு சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் - வெளியான முக்கிய அறிவிப்பு

  தினத்தந்தி
கோவைபாலக்காடு சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்  வெளியான முக்கிய அறிவிப்பு

கோவை-பாலக்காடு சாலையில் மரப்பாலம் பகுதியில் ரெயில்வே பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலம் மிகவும் குறுகலாக உள்ளதால் ஒரு நேரத்தில் ஒரு பஸ் மட்டுமே செல்ல முடியும். இதனால் எதிர்திசையில் இருந்து வாகனங்கள் பாலத்தை கடக்க காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதன்காரணமாக இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் குறுகிய பாலத்தை அகலப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.இதன்படி இந்த பாலம் 18 மீட்டர் அகலம், 5.7 மீட்டர் உயரத்துடன் 4 வழிச்சாலையுடன் அமைக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக 3 மீ அகல நடைபாதையும் அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பால பணி காரணமாக மரப்பாலம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.இதுகுறித்து கோவை மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-கோவை-பாலக்காடு சாலையில் மதுக்கரை அடுத்துள்ள மரப்பாலம் அகலப்படுத்தும் பணி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நடைபெறுகிறது. இதனால் கோவையில் இருந்து க.க.சாவடி, வாளையாறு முதல் இந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.இதன்படி கோவையில் இருந்து க.க.சாவடி, வாளையாறு மற்றும் பாலக்காடு செல்லும் பஸ் மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டும் மதுக்கரை சந்திப்பில் இடது புறம் திரும்பி குவாரி ஆபீஸ் சாலை, குரும்பபாளையம் சாலை, மதுக்கரை மார்க்கெட் சாலை, செட்டிபாளையம் சாலை வழியாக செட்டிபாளையம் பிரிவுக்கு செல்ல வேண்டும். கனரக வாகனங்கள் மேற்படி சாலையில் செல்ல அனுமதி இல்லை.மேலும் வாளையாறு மற்றும் பாலக்காட்டில் இருந்து, கோவை, குனியமுத்தூர், உக்கடம் செல்லும் பஸ்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டும் செட்டிபாளையம் பிரிவு, விறகுக்கடை பாலம் வழியாக சென்று சிமெண்ட் பேக்டரி சாலை வழியாக செல்ல வேண்டும். கனரக வாகனங்கள் மேற்படி சாலையில் செல்ல அனுமதி இல்லை.மேலும் கோவையில் இருந்து க.க.சாவடி, வாளையாறு மற்றும் பாலக்காடு செல்லும் கனரக வாகனங்கள் ஆத்துப்பாலம் சந்திப்பில் இருந்து இடது புறம் திரும்பி குறிச்சி, ஈச்சனாரி சாலை வழியாக சென்று சேலம்-கொச்சின் சாலையில் கற்பகம் கல்லூரி சந்திப்பில் வலது புறம் திரும்பி செல்ல வேண்டும். மேலும் வாளையாறு மற்றும் பாலக்காட்டிலிருந்து கோவைக்கு வரும் கனரக வாகனங்கள் கற்பகம் கல்லூரி-பொள்ளாச்சி சாலை சந்திப்பில் இடது புறம் திரும்பி ஈச்சனாரி, குறிச்சி சாலை வழியாக ஆத்துபாலம் சந்திப்புக்கு செல்ல வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மூலக்கதை