அவியல், கூட்டுப்போல் வேளாண்மை பட்ஜெட்: எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

  தினத்தந்தி
அவியல், கூட்டுப்போல் வேளாண்மை பட்ஜெட்: எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

சென்னை, நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து 15-ந்தேதி (இன்று) வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி வேளாண்மை பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில் விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் 2025-26 நிதியாண்டில் தமிழ்நாடு வேளாண்மை துறைக்கு மொத்தம் ரூ.45,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இந்நிலையில் அவியல், கூட்டுப்போல் வேளாண்மை பட்ஜெட் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் என்பது போலியானது. 5வது முறையாக வேளாண் பட்ஜெட்டை 1.30 மணி நேரமாக வாசித்துள்ளனர். வேளாண் பட்ஜெட்டை 1.30 மணி நேரம் வாசித்தது மட்டுமே தி.மு.க.வின் சாதனை. விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்டாக இது உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டில் நெல், கரும்பு உற்பத்தி குறைந்துவிட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் தான் பல உள்ளன. சாகுபடி பரப்பை 75 சதவிகிதமாக உயர்த்துவதாக கூறினார்கள். ஆனால் இதுவரை 37.7 சதவிகிதமாகவே உள்ளது. அத்திக்கடவு அவினாசி திட்டம் போல் ஒரு திட்டத்தை தி.மு.க. கொண்டு வரவில்லை. அத்திக்கடவு அவினாசியில் 2வது திட்டத்தை அ.தி.மு.க. கொண்டு வந்தது. அதனையும் இந்த அரசு கைவிட்டுள்ளது. கடன் பெற்றுதான் திட்டங்களை நிறைவேற்றும் நிலை உள்ளது. கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்பதுதான் தி.மு.க. அரசு செய்த சாதனையாகும். நிதி மேலாண்மையை சரி செய்ய அமைக்கப்பட்ட நிபுணர் குழு என்ன செய்தது? நிதி மேலாண்மை நிபுணர் குழு அறிவிக்கப்பட்ட பின்னர்தான் நிறைய கடன் வாங்கி உள்ளது. மழைநீரை சேமிக்கும் குடிமராமத்து திட்டத்தை தி.மு.க. அரசு கைவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு முழுமையாக கடனில் மூழ்கியுள்ளது.வேளாண் துறை சார்ந்த பல துறைகளை ஒன்றாக இணைத்து அவியல் போல ஒரு பட்ஜெட்டை அறிவித்துள்ளனர். விவசாயிகளை ஏமாற்றுவதில் தி.மு.க.வினர் வல்லவர்கள். தவறு செய்ய வசதியான திட்டங்கள்தான் பட்ஜெட்டில் உள்ளன. விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் திட்டங்கள் எதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்தான் இதில் பல உள்ளன" எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மூலக்கதை