நாக்பூரில் வன்முறை வெடித்துள்ள நிலையில் அங்கு 144 தடை உத்தரவு அமல்

மும்பை. மராட்டியம் மாநிலம் சாம்பாஜி நகரில் உள்ள அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வலியுறுத்தி நேற்று நாக்பூர் மகால் பகுதியில் உள்ள சத்ரபதி சிவாஜி சிலை அருகே பஜ்ரங் தள உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை எரித்ததாக வதந்திகள் பரவின. இதுகுறித்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியது. இது இஸ்லாமியர்கள் இடையே சீற்றத்தை ஏற்படுத்தியது.இதைத்தொடர்ந்து மகால், கோட்வாலி, கணெஷ்பேத் மற்றும் சிதான்விஸ் பூங்கா உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் கூடி போராட்டம் நடத்தினர். சிட்னி பூங்கா மற்றும் மகால் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென வன்முறையில் இறங்கினர். அவர்கள் பாதுகாப்புக்கு வந்த போலீசார் மீது கற்களை வீசினர். வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதனால் அந்தப்பகுதியில் வன்முறை வெடித்தது.இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலவரத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைத்தனர். இதில் 9 பேர் காயம் அடைந்தனர். இதேபோல கோட்வாலி மற்றும் கணேஷ்பேத் பகுதியில் வன்முறை ஏற்பட்டது. இந்த சம்பவங்கள் காரணமாக நாக்பூரில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.இதற்கிடையே பஜ்ரங் தள நிர்வாகிகள் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். தங்கள் ஆர்ப்பாட்டத்தில் அவுரங்கசீப்பின் உருவ பொம்மையை மட்டுமே எரித்ததாக அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் வன்முறை வெடித்துள்ள நாக்பூரில் அமைதி காக்க மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவுறுத்தி உள்ளார். இதனிடையே நாக்பூரில் வன்முறை வெடித்துள்ள நிலையில் அங்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மூலக்கதை
