கலைஞர் கனவு இல்லம் திட்டம்: மே 31ம் தேதிக்குள் ஒரு லட்சம் வீடுகள் - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

சென்னை, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய வீடுகள் 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டும் பணிகள் தொடங்கப்படும் என்று பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார். இந்த சூழலில் தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் செல்லூர் ராஜு, "கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை விட குறைவான நிதிதான் செலவு செய்யப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, "நீங்கள் பசுமை வீடு திட்டத்தை அறிவித்தீர்கள். முழுமையாக செயல்படுத்தவில்லை. வரும் மே மாதம் 31ம் தேதிக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும். கடந்த 8 ஆண்டு காலத்தில் 8 லட்சம் வீடுகள் கட்டப்படும்" என்று அவர் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் 5 ஆண்டுகளில் 3 லட்சம் பசுமை வீடுகள் கட்டபட்டதாக தெரிவித்தார்.
மூலக்கதை
