9 மாதங்களுக்கு பின் பூமிக்கு திரும்பிய சுனிதா, வில்மோர்: உடல்நிலை நிலை குறித்து நாசா கூறியது என்ன..?

  தினத்தந்தி
9 மாதங்களுக்கு பின் பூமிக்கு திரும்பிய சுனிதா, வில்மோர்: உடல்நிலை நிலை குறித்து நாசா கூறியது என்ன..?

வாஷிங்டன்,விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ்., எனப்படும் சர்வதேச விண்வெளி மையத்தில் 9 மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ் (59), மற்றும் புட்ச் வில்மோர் (62), இன்று அதிகாலை பூமிக்கு திரும்பினர். அவர்களை சுமந்துள்ள 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் 'டிராகன்' விண்கலம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3:27 மணிக்கு புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரை இறங்கியது. பாராசூட் அவர்களின் கேப்சூலை கடலில் இறக்க, ஏற்கனவே அங்கு வந்திருந்த நாசா அதிகாரிகள், விண்கலத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் உட்பட 4 பேரையும் படகில் ஏற்றி அழைத்துச் சென்றனர். பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்களும் 4 பேரும் உற்சாகத்துடன் கையசைத்தனர். தற்போது அவர்களால் நடக்க முடியவில்லை என்றாலும், ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 9 மாதங்களுக்கு பின் பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகியோர் மிகவும் ஆரோக்கியமாக உள்ளனர் என்று இருவரையும் பரிசோதித்த பின் நாசா அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர். இதன்படி இருவரின் உடலும் புவிஈர்ப்பு விசைக்கு ஏற்ப ஒத்துழைக்க தொடங்கி உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்வெளி மையத்தில் இருந்தபோது அவர்களின் உடல் எடையற்றதைப் போன்று இருந்திருக்கும். அதனால் தசை உள்ளிட்ட உறுப்புகள் புவிஈர்ப்பு விசைக்கு ஏற்ப சீராக செயல்பட நேரம் பிடிக்கும் என்று நாசா அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 8 நாள் பயணமாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 286 நாட்கள் விண்வெளியிலேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

மூலக்கதை