தெரு நாய்கள் கடித்து மரணிக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

  தினத்தந்தி
தெரு நாய்கள் கடித்து மரணிக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

சென்னை, தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 3வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் தெரு நாய் கடி சம்பவம் தொடர்பாகவும், நாய் கடித்து மரணம் அடையும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாகவும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.சி.கருப்பண்ணன் மற்றும் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர். இதற்கு பதில் அளித்த பேசிய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் அமைச்சர் ஐ.பெரியசாமி, "சமீப காலங்களில் தெரு நாய்கள் கடித்து வெள்ளாடு, செம்மறி ஆடுகள் பாதிக்கப்படுவதாக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. தெரு நாய்கள் கடித்து மரணம் அடையும் கால் நடைகளுக்கு பேரிடர் மேலாண்மை விதிகளின் படி உரிய இழப்பீடு வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தெரு நாய் கடித்து உயிரிழக்கும் மாடுகளுக்கு ரூ.37,500, ஆடுகளுக்கு ரூ.4,000, கோழிக்கு ரூ.100 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி தெரு நாய்கள் கடித்து மரணம் அடைந்த 1,149 கால்நடைகளுக்கு மொத்தம் ரூ.42 லட்சம் இழப்பீடு வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, "தெருநாய்கள் பிரச்னை தொடர்பாக நேற்று முன்தினமே உரிய விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. வெறிநாய்களை பிடித்து அவற்றிற்கு ஊசி செலுத்தி குணமடைந்த பின் மீண்டும் விட்டுவிட வேண்டும் என சட்டம் சொல்கிறது. வெறிநாய்களை கட்டுப்படுத்த சுப்ரீம்கோர்ட்டில் சிறப்பு மனு தாக்கல் செய்து உத்தரவு பெற்றால் தான் தீர்வு கிடைக்கும், இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார்" என்று அவர் கூறினார்.

மூலக்கதை