பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்:சட்டசபையில் வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

  தினத்தந்தி
பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்:சட்டசபையில் வாழ்த்து தெரிவித்த முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ்., எனப்படும் சர்வதேச விண்வெளி மையத்தில் 9 மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ் (59), மற்றும் புட்ச் வில்மோர் (62), இன்று அதிகாலை பூமிக்கு திரும்பினர். அவர்களை சுமந்துள்ள 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் 'டிராகன்' விண்கலம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3:27 மணிக்கு புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரை இறங்கியது. இதன்படி பத்திரமாக இருவரும் அவர்களது குழுவுடன் விண்வெளியிலிருந்து திரும்பினர். இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க்.ஸ்டாலின் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புச் வில்மோருக்கு சட்டசபை கூட்டத்தொடரின் போது வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், "விண்வெளிக்குச் சென்று அங்கு 9 மாதங்களாக இருந்து பூமிக்குத் திரும்பிய விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோருக்கு பாராட்டுகள். சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புச் வில்மோரை பாதுகாப்பாக தரையிறக்க உழைத்தவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக மீண்டும் பூமிக்கு வந்தடைந்த செய்தி அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மூலக்கதை