நெல்லை ஜாகீர் உசேன் கொலை வழக்கு: உதவி ஆணையர் சஸ்பெண்ட்

நெல்லை மாநகர் டவுன் பகுதியில் நேற்று முன் தினம் காலையில் தொழுகை முடித்து வீடு திரும்பி கொண்டிருந்த ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன் பிஜிலி, நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.வக்பு நிலத்தகராறு காரணமாக தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக கொல்லப்படுவதற்கு முன்பு ஜாகீர் உசேன் பேசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலை மிரட்டல்கள் குறித்து காவல் நிலையத்தில் ஜாகீர் உசேன் புகார் அளித்த போது, உதவி ஆணையராக இருந்த செந்தில்குமார், ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என ஜாகீர் உசேனின் குடும்பத்தினர் குற்றம் சாட்டி உடலை வாங்க மறுத்தனர்.இதனிடையே ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்டது குறித்து சட்டசபையில் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் மீதான விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று மூன்று மாதங்களுக்கு முன்பே ஜாகீர் உசேன் புகார் அளித்தும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். மேலும் இந்த கொலை சம்பவத்திற்கு காரணமானவர்கள் அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதேபோல் மற்ற கட்சிகளின் உறுப்பினர்களும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.இதற்கு பதிலளித்து பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்த வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் கைதுசெய்யப்படுவார்கள் என்று உறுதியளித்தார். மேலும் நிலப்பிரச்னை தொடர்பான இந்த கொலை சம்பவத்தில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த இருவர் கோர்ட்டில் சரணடைந்தனர்.இதற்கிடையே ஜாகீர் உசேன் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர், கொலை மிரட்டல் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காத நெல்லை நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தெரிவித்தனர். மேலும், தற்போது கோவை நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக உள்ள செந்தில் குமார் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் எடுத்துரைத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட குடும்பத்தினர் ஜாகீர் உசேனின் உடலை பெற்றுக்கொண்டனர். ஜாகீர் உசேன் உடலுக்கு அவரது குடும்பத்தினர் சிறப்புத் தொழுகை நடத்தி நல்லடக்கம் செய்தனர்.இந்நிலையில் ஜாகீர் உசேன் கொலை வழக்கில் நடவடிக்கை எடுக்க தவறியதற்காக, நெல்லை மாநகர காவல் உதவி ஆணையராக இருந்த செந்தில்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் நேற்று, காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது, இதனிடையே ஜாகீர் உசேன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கிருஷ்ணமூர்த்தி என்ற தவுபிக்கை ரெட்டியாப்பட்டி பகுதியில் நெல்லை மாநகரக் காவல்துறையினர் சுற்றிவளைத்தனர். அவரை கைது செய்ய முற்பட்டபோது, முகமது தவுபிக் அரிவாளைக் கொண்டு காவலர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில், தலைமை காவலர் ஆனந்த் என்பவர் காயமடைந்தார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் முகமது தவுபிக்கை சுட்டுப்பிடித்தனர்.துப்பாக்கி சூட்டில் குற்றவாளி முகமது தவுபிக்கிற்கு இடது காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், காவலர் ஆனந்துக்கு கையில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டு சிகிச்சை நடந்து வருவதாகவும் மாநகர காவல் துணை ஆணையர் தெரிவித்தார்.
மூலக்கதை
