மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை

  தினத்தந்தி
மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை

நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் இந்த அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்வது வழக்கம்.இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவிக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக அம்பாசமுத்திரம் புலிகள் காப்பகம் துணை இயக்குநர்/ வன உயிரின காப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனக்கோட்டம் அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்க்கு உட்பட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பாதுகாப்பு கருதி மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மற்றும் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி கோவை, நெல்லை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை