"நியாயமான தொகுதி வரையறை.. அடுத்த கூட்டம் ஐதராபாத்தில்.." - தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி

  தினத்தந்தி
நியாயமான தொகுதி வரையறை.. அடுத்த கூட்டம் ஐதராபாத்தில்..  தெலுங்கானா முதல்மந்திரி ரேவந்த் ரெட்டி

சென்னை, சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் இன்று காலை கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டத்துக்கு தலைமை தாங்கி நடத்தி வருகிறார். இந்தக் கூட்டத்தில், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, கர்நாடகா துணை முதல்-மந்திரி டிகே சிவகுமார், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் சிங் மான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒடிசா முன்னாள் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து பேசிய தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, "எனது முதல் கருத்து, மக்களவை தொகுதியை அதிகரிக்க வேண்டாம். தொகுதி மறுசீரமைப்பால் தென் இந்தியா அரசியல் குரலை இழக்கும். இந்திரா காந்தி ஆட்சியிலும், தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டது. ஆனால், தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படவில்லை. மக்கள்தொகை அடிப்படையிலான வரம்பை நாங்கள் ஏற்க மாட்டோம். மக்களவையில் தென் மாநிலங்களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தி, சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனையே தொகுதி மறுவரையறை. கட்சி வேறுபாடுகளை களைந்து ஒன்றாக இணைந்து இதை எதிர்த்து போராடுவோம்.டெல்லியிலும் இதற்குரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும். பா.ஜ.க. நம்மை பேசவே அனுமதிப்பதில்லை. அவர்கள் நினைப்பதையே முடிவாக எடுக்கிறார்கள். இந்த பிரச்னை குறித்து எங்களுடைய சட்டப்பேரவையில் விரைவில் ஒரு தீர்மானம் நிறைவேற்றுவோம். நீங்களும் உங்களுடைய மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றுங்கள். தென் மாநிலங்களின் வலிமையான குரலை மொத்த இந்தியாவும் கேட்கட்டும்" என்று கூறினார்.

மூலக்கதை