அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு

  தினத்தந்தி
அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு

பத்ராசலம், தெலுங்கானாவின் பத்ராசலம் நகரில் ஆறு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 6 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருந்த கட்டிடம் பிற்பகலில் திடீரென இடிந்து விழுந்ததில் பல தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் புதைந்தனர். இந்த கோர சம்பவத்தில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும், இன்னும் கட்டிடத்திற்குள் சிக்கி இருப்பவர்களை மீட்கும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சம்பவ இடத்தில் மீட்புக் குழுவினர் புல்டோசர்கள் மற்றும் பிற கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி இடிபாடுகளை அகற்றி வருகின்றனர். கட்டிடத்திற்கு அருகில் ஒரு கோவிலும் கட்டப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. விபத்து எப்படி நடந்தது?கட்டுமானக் குறைபாடுகள் காரணமாக விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ள நிலையில், கட்டிடத்தை கட்டுவதற்கு தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும், இதுவே விபத்துக்குக் காரணம் என்றும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.பழைய இரண்டு மாடி கட்டிடத்தின் மேல் புதிதாக கட்டிடத்தின் நான்கு தளங்கள் கட்டப்பட்டு வருவதாகவும், இதனால் புதிய கட்டுமானத்தை அசல் கட்டமைப்பு தாங்க முடியாமல் போனது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, கட்டிடம் பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

மூலக்கதை