"சிங்கார சென்னை" பயண அட்டை: பொது மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம்

சென்னை, தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி (Airtel Payments Bank) மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழகம் இணைந்து வழங்கும் "சிங்கார சென்னை" பயண அட்டை வாயிலாக பயணிகள் பயணச்சீட்டு பெற்று பயணம் மேற்கொள்ள ஏதுவாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், இன்று (26.03.2025) தலைமைச் செயலகத்தில் அறிமுகம் செய்து வைத்தனர். சிங்கார சென்னை பயண அட்டையானது, பயணிகளுக்கு தடையற்ற மற்றும் பணமில்லா பரிவர்த்தனை பயண அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட தொலை நோக்கு திட்டமாகும். மாநகர் போக்குவரத்துக் கழக அனைத்துப் பேருந்துகளிலும், ஏற்கனவே சிங்கார சென்னை பயண அட்டையை பயன்படுத்தும் வகையில், மின்னனு பயணச்சீட்டு வழங்கும் இயந்திரம் (Electronic Ticketing Machine) உபயோகத்தில் உள்ளது. இத்திட்டத்தில், ஏற்கனவே பாரத ஸ்டேட் வங்கி வாயிலாக "சிங்கார சென்னை" பயண அட்டைகள் வழங்கப்படுகிறது. இதில், 30,000-க்கும் மேலான பயண அட்டைகள் பயணிகளுக்கு வழங்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் 16,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இத்திட்டத்தினை மேலும் விரிவுப்படுத்தும் வகையில். ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி சென்னை மாநகரின் முக்கிய பேருந்து நிலையங்கள் மற்றும் பயணிகள் பயன்பாடு அதிகம் உள்ள பேருந்து நிறுத்தங்களிலும் இந்த "சிங்கார சென்னை" பயண அட்டை ரூ.100/-க்கு வழங்கப்படும். இதில் ரூ.50/- மதிப்புக்கான பயணம் மேற்கொள்ளலாம். மேற்கொண்டு பயணம் மேற்கொள்ள இவ்வட்டைகளை இணையவழி சேவை, கைப்பேசி செயலி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் விற்பனை மையங்கள் மூலமாக எளிதாக ரீசார்ஜ் செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சிங்கார சென்னை பயண அட்டையில் ஏற்கனவே 20 பயண நடைகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் (UPDATE) முறை மாற்றப்பட்டு, பயணிகள் எண்ணிக்கையற்ற பயண நடைகளை மேற்கொள்ள ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, இவ்வட்டையின் பின்புறம் உள்ள கியூ.ஆர்.குறியீடை (QR Code) பயணிகள் தங்களின் கைப்பேசி செயலிகள் மூலம் ஸ்கேன் (Scan) செய்து ரீசார்ஜ் (Recharge) செய்து கொள்ளலாம். மேலும், ரீசார்ஜ் (Recharge) செய்த பின் அவ்வட்டையை புதுப்பிக்க (Balance Update) பயணிகள் என்.எப்.சி. (NFC) தொழில்நுட்பம் கொண்ட கைப்பேசிகள் மூலம் தாமாகவே ஏர்டெல் தேங்ஸ் செயலி மூலம் புதுப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மூலக்கதை
