சிவகங்கை: பெண் டாக்டரின் முகத்தை மூடி தாக்க முயற்சி.. இளைஞர் கைது

  தினத்தந்தி
சிவகங்கை: பெண் டாக்டரின் முகத்தை மூடி தாக்க முயற்சி.. இளைஞர் கைது

சிவகங்கை, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் விடுதியில் உள்ள நடைபாதையில் நடந்து சென்று உள்ளார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்துள்ளார். பயிற்சி பெண் டாக்டர் அருகே வந்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இறங்கி உள்ளார். அந்த இடம் இருட்டாக இருந்துள்ளது.தான் வைத்திருந்த துணியால் அந்த நபர் திடீரென பெண் டாக்டரின் முகத்தை மூடி அவரை தாக்க முயன்றார். இதில் அந்த பெண் டாக்டர், அதிர்ச்சியில் அலறி உள்ளார். இந்த சத்தம் கேட்டு விடுதியில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். ஆட்கள் வருவதை பார்த்ததும் அந்த நபர், மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகவேகமாக தப்பிச் சென்றுவிட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில் நேற்று காலை கல்லூரி விடுதியில் தங்கி உள்ள பயிற்சி டாக்டர்கள் திரண்டனர். தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசீஸ் ராவத், கூடுதல் சூப்பிரண்டுகள் கலைக்கதிரவன், பிரான்சிஸ், துணை சூப்பிரண்டு அமல அட்வின் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்களிடம், சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவக்கல்லூரி டீன் சத்தியபாமா கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மோட்டார் சைக்கிளில் தப்பிய நபரை போலீசார் வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், இரவு நேரத்தில் பெண் பயிற்சி டாக்டரின் முகத்தை துணியால் மூடி, தாக்குதல் நடத்திய இளைஞர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி பணி முடிந்து விடுதிக்கு நடந்து சென்ற பெண் டாக்டர் மீது தாக்குதல் நடத்தியதாக சிவகங்கையைச் சேர்ந்த சந்தோஷ் (20) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூலக்கதை