ஓசூர் அருகே 7,525 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்: லாரி ஓட்டுநர்கள் கைது

ஓசூர், அமலாக்கப் பிரிவு புலனாய்வு துறை மாநிலம் முழுவதும் சட்ட விரோத மதுபான வர்த்தகத்தை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அமலாக்கப்பிரிவுபுலனாய்வு துறை தமிழகத்தில் போலி மதுபான வர்த்தகத்தை கட்டுப்படுத்த தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தை மிகவும் உறுதியாக அமல்படுத்தி வருகிறது.முதன்மையாக போலி மதுபானம் தயாரிக்கும் கூடங்கள், எரிசாராயம் கடத்தல்கள், சட்ட விரோதமாக மதுபானம் தயாரிக்கும் கூடங்கள், பிற மாநில மதுபானங்கள் கடத்தல்களை தடுக்க தொடர் கண்காணிப்பு மற்றும் வேட்டைகள் நடத்தி வருகிறது.அமலாக்கப்பிரிவு புலனாய்வு துறை தற்போது மிக நுணுக்கமான நுண்ணறிவு தகவல்களை சேகரித்து உடனடி மற்றும் தொடர் நடவடிக்கை எடுத்துவருகிறது. சமீபத்தில் கோயம்புத்தூர் மத்திய புலனாய்வு பிரிவு குழுவினரால் கோயம்புத்தூர் சூலூரில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைத்திருந்த 5,145 லிட்டர் எரிசாராயம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கோயம்புத்தூர் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையிலான குழு, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தர்கா அருகே ஒரு லாரியை வழிமறித்து சோதனை செய்தபோது 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 215 வெள்ளை நிற கேனில், 7,525 லிட்டர் எரிசாராயம் கடத்திவரப்பட்டத்தை கண்டுபிடித்தனர். லாரி மற்றும் கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இரண்டு ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இந்த எரிசாராயம் கர்நாடகா மாநிலம் தார்வட்த்திலிருந்து பாலக்காடு கேரளாவுக்கு கடத்திவரப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எரிசாராயம் கள்ளில் கலக்கும் நோக்கத்துடன் கடத்திவரப்பட்டதாக தெரியவருகிறது. இந்த செயல்பாட்டின் முக்கிய மூளையாக செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மதுபானத்தை கடத்த உதவிய லாரி ஓட்டுநரும் கைது செய்யப்பட்டார். இதுபோன்ற சட்டவிரோத மதுபான வர்த்தகங்களை தடுக்கும் நோக்கில், துறை தொடர்ந்து கடுமையான கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது. பொது மக்கள் சட்டவிரோத மதுபான வர்த்தகம் தொடர்பான தகவல்களை இலவச தொலைபேசி எண். 10581 அல்லது CUG எண். 9498410581 என்ற எண்ணிற்கு தகவல் வழங்கலாம். வழங்கப்படும் அனைத்து தகவல்களும் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலக்கதை
