டாஸ்மாக் மீது விசாரணை நடத்த இந்திய போட்டி ஆணையம் உத்தரவு

  தினத்தந்தி
டாஸ்மாக் மீது விசாரணை நடத்த இந்திய போட்டி ஆணையம் உத்தரவு

புதுடெல்லி, தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் குறிப்பிட்ட சில ரக பீர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து கொள்முதல் செய்து விற்பனை செய்வதாகவும், பிற ரகங்கள் குறைந்த அளவிலேயே விற்கப்படுவதாகவும் இந்திய போட்டி ஆணையத்தில் (சி.சி.ஐ.) புகார் செய்யப்பட்டு உள்ளது. டாஸ்மாக்கின் இந்த நடவடிக்கை வர்த்தக போட்டியை குறைப்பதாக குற்றம் சாட்டப்பட்டு இருப்பதுடன், வாடிக்கையாளர்களின் தேர்வு செய்யும் உரிமையை குறைப்பதுடன், நியாயமான வர்த்தக போட்டியை தடுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.இதைத்தொடர்ந்து இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த இந்திய போட்டி ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி 60 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சி.சி.ஐ. இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.முன்னதாக இந்த குற்றச்சாட்டை மறுத்திருந்த டாஸ்மாக் நிர்வாகம், தங்கள் கொள்முதல் நடைமுறையானது தானியங்கி முறையில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், சராசரி விற்பனை கணக்கீட்டு முறையை அடிப்படையாகக் கொண்டது எனவும் கூறியிருந்தது.அந்தவகையில் முந்தைய மாத விற்பனை மற்றும் இருப்பு நிலவரத்தின் அடிப்படையில் சாப்ட்வேர் மூலம் ஒவ்வொரு மாத தொடக்கத்தில் கொள்முதல் ஆர்டர் தயார் செய்யப்பட்டு வருவதாக கூறியுள்ள டாஸ்மாக் நிர்வாகம், நுகர்வோரின் விருப்பம் மற்றும் தேவையை பூர்த்தி செய்யும் உற்பத்தியாளரின் திறன் அடிப்படையிலேயே குறிப்பிட்ட ஒரு ரகத்தின் விற்பனை நடைபெறுகிறது என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை