கர்நாடகாவில் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வு: 1-ம் தேதி முதல் அமல்

  தினத்தந்தி
கர்நாடகாவில் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வு: 1ம் தேதி முதல் அமல்

பெங்களூரு,கர்நாடகாவில் பால் விலையை உயர்த்த வேண்டும் என பால் கூட்டமைப்பு சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. லிட்டருக்கு ரூ.5 உயர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதுகுறித்து பால் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார். கூட்ட முடிவில் பால் விலை உயர்வு குறித்து மந்திரிசபையில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் மந்திரிசபை கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் இன்று நடைபெற்றது. இதில் மந்திரிகள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் நந்தினி பால் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. தயிர் விலையையும் 4 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. மந்திரி சபை ஒப்புதல் அளித்ததையடுத்து, பால் விலை உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பால் விலை உயர்வின் பயன் முழுவதையும் பால் உற்பத்தியாளர்களுக்கே வழங்க வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.இதுபற்றி கால்நடை பராமரிப்புத் துறை மந்திரி வெங்கடேஷ் கூறியதாவது:-கர்நாடகாவில் உள்ள பால் பண்ணையை ஊக்குவிப்பதற்காக நந்தினி பால் மற்றும் தயிரின் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பால் உற்பத்தி மற்றும் பதப்படுத்த ஆகும் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், அதைக் கருத்தில் கொண்டே விலை உயர்வு அமல்படுத்தப்படுகிறது.விலை உயர்வின் பலன்களை மாநிலத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் நேரடியாகப் பெறுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஜூன் 26ம் தேதி நந்தினி பால் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டு இருந்தது. அதை ரத்து செய்கிறோம். அதற்குப் பதிலாக இந்த விலை உயர்வை அமல்படுத்துகிறோம்இவ்வாறு அவர் கூறினார்.மந்திரி சபை முடிவின்படி, நீல நிற பாக்கெட் பால் ஒரு லிட்டர் ரூ.44-ல் இருந்து ரூ.48 ஆக அதிகரிக்கப்படுகிறது.

மூலக்கதை