பவுலர்கள் பந்தை எடுத்துக்கொண்டு வெளியே ஓடும் காலம் தூரத்தில் இல்லை - அஸ்வின் கிண்டல்

சென்னை, இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில், ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய வீரர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு முன்னணி வீரர்களும் இணைந்து விளையாடுவதால் இந்த சரவெடி கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு. இதனால் 18-வது ஆண்டாக இந்த போட்டி வீறுநடை போடுகிறது. இதுவரை நடந்துள்ள 17 தொடர்களில் அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளன.இந்த தொடரில் மேலும் சுவாரசியத்தை கூட்ட கடந்த 2020-ம் ஆண்டு 'இம்பேக்ட்' வீரர் விதிமுறை' கொண்டு வரப்பட்டது. இதன்படி ஆட்டத்தின் இடையே ஒரு வீரரை எடுத்து விட்டு அவருக்கு பதிலாக மாற்று வீரரை சேர்க்க முடியும். அந்த வீரர் பேட்டிங்கும் செய்யலாம். பந்தும் வீசலாம். கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் இறங்குவதன் தாக்கத்தை கடந்த சீசனில் பார்க்க முடிந்தது. கடந்த ஐ.பி.எல். தொடரில் அணிகள் 41 முறை 200 ரன்களுக்கு மேல் எடுத்து சாதனை படைத்தன.இந்த சீசனிலும் அது தொடருகிறது. முதல் 5 ஆட்டங்களில் மட்டும் 119 சிக்சரும், 183 பவுண்டரியும் நொறுக்கப்பட்டுள்ளன. இது சென்ற ஆண்டில் முதல் 5 ஆட்டங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் அதிகமாகும்.இதனால் பந்து வீச்சாளர்கள் வெகுவாக பாதிக்கப்படுவதால் அதிருப்திக்குள்ளான குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடா இப்படியே போனால் இந்த விளையாட்டின் பெயரை கிரிக்கெட் என்பதற்கு பதிலாக பேட்டிங் என்று அழைக்க வேண்டி வரும். பேட்டிங் மற்றும் பந்து வீச்சுக்கு இடையே சரிசம போட்டி இருக்க வேண்டும் என்று தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார். அந்தவரிசையில் தற்போது இணைந்துள்ள சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் விருது வழங்குவதில் கூட பேட்ஸ்மேன்களுக்கு உள்ளது போன்ற சிறப்பான விருதுகள் பவுலர்களுக்கு இல்லை என்று அதிருப்தி தெரிவித்துள்ளார். எனவே பவுலர்கள் மைதானத்திலிருந்தே பந்தை எடுத்துக்கொண்டு வெளியே ஓடும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று கிண்டலடித்துள்ளார்.இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "ஐ.பி.எல். தொடரில் ஒவ்வொரு போட்டிகளுக்கும் குறைந்தது 10 விருதுகளை வழங்குகிறார்கள். அதில் 50 சதவீத விருதுகளை இரு அணிகளிலும் பெறுகிறார்கள். ஆனால் யாராவது நன்றாக பந்து வீசினால் அல்லது நல்ல ஓவரை வீசினால் அதற்கு விருது வழங்கப்படுவதில்லை. ஆனால் பேட்ஸ்மேன்களுக்கு சூப்பர் ஸ்ட்ரைக்கர், சூப்பர் பவுண்டரிகள், சூப்பர் சிக்சர்கள் விருகள் எல்லாம் இருக்கின்றன. பவுலர்களுக்கு சூப்பர் பால் விருது இல்லை. ஒரு காலத்தில் வேகமாக வீசப்பட்ட பந்துக்கு விருது இருந்தது. ஆனால் அந்த பந்தில் யாராவது சிக்சர் அடித்தால், அவருக்கும் விருது வழங்கப்பட்டது. எனவே பந்துவீச்சாளர்கள் மைதானத்திலிருந்து பந்தை எடுத்துக்கொண்டு வெளியே ஓடும் காலம் தூரத்தில் இல்லை. நாங்கள் பந்தை வீசவில்லை என்றால், நீங்கள் அதை எப்படி அடிப்பீர்கள்?" என்று கூறினார்.
மூலக்கதை
