"எம்புரான்" திரை விமர்சனம்

  தினத்தந்தி
எம்புரான் திரை விமர்சனம்

2019-ல் வெளியான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள படம். கேரளாவில் நல்லாட்சி தருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட டொவினோ தாமஸ், ஊழலில் திளைத்து மக்களின் வெறுப்பை சம்பாதிக்கிறார். தந்தை மறைவுக்கு பிறகு அவரது செயல்பாடுகள் மோசமடைகிறது. தன் மீதான வழக்கு விசாரணைகளில் இருந்து தப்பிக்க மத்தியில் ஆளும் கட்சியுடன் கூட்டணி சேருகிறார். தன் சொந்த கட்சியில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்குகிறார். இதனால் அவரது சகோதரி மஞ்சு வாரியர் வெறுப்பு கொள்கிறார். மக்களும் அரசுக்கு எதிராக திரள்கிறார்கள். இன்னொரு புறம் சர்வதேச அளவில் போதை கும்பலின் அக்கிரமங்கள் அதிகரித்து வருகிறது. இந்த அக்கிரமங்களை தடுத்து நிறுத்த முந்தைய பாகத்தில் நல்லாட்சிக்கு காரணமாக நின்று, தற்போது நிழல் உலக தாதாவாக இருக்கும் மோகன்லால் மீண்டும் வரவேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். மோகன்லால் மீண்டும் நிழல் உலகில் இருந்து வெளியே வந்தாரா? ஆட்சியில் நடைபெறும் அத்துமீறல்களையும், சமூகத்தில் நடக்கும் போதைப்பொருள் நடமாட்டத்தையும் ஒழித்தாரா, இல்லையா? என்பதே பரபரப்பான மீதி கதை. முதல் பாதியில் கோட் சூட் என வாட்டசாட்டமாகவும், இரண்டாம் பாதியில் வேட்டி - சட்டையில் கம்பீரமாகவும் தோரணையாக வாழ்ந்துள்ளார், மோகன்லால். போதை கும்பல்களை கட்டுப்படுத்த அவர் மேற்கொள்ளும் சாகச நடவடிக்கைகள் வியப்பு. அரசியலமைப்பில் உள்ள பிரச்சினைகளை சரிகட்டும் அவரது முகம் எதிர்பாராதது. ஆக்ஷன் காட்சிகள் அனல் தெறிக்கிறது. டொவினோ தாமஸ் வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளார். அவரது சின்ன சின்ன உடல்மொழிகளும் ரசிக்க வைக்கிறது. தன் மீதான விசாரணை வழக்குகளை திசைதிருப்ப அவர் செய்யும் அக்கிரமங்கள் பயத்தை உண்டாக்குகிறது. மஞ்சுவாரியர் எதார்த்தமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். அவரை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம். பிருத்விராஜின் எதிர்பாராத 'என்ட்ரி'க்கு கைதட்டல் கிடைக்கிறது. ஆக்ஷன் காட்சிகளிலும் பட்டையை கிளப்பியுள்ளார். சுகந்த் கோயல், இந்திரஜித் சுகுமாரன், பாசில், சுராஜ் வெஞ்ஞாரமூடு, கிஷோர், பைஜு சந்தோஷ் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு சிறப்பு சேர்க்கிறார்கள். 360 டிகிரி கோணத்தில் கேமராவை சுழற்றி ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ் வித்தை காட்டியுள்ளார். ஆப்பிரிக்கா, லண்டன், எகிப்து, வட இந்தியா என கண்முன்னே பிரமிப்பை உண்டாக்குகிறார். அட்டகாசமான பின்னணி இசையால் படத்துக்கு மெருகேற்றியுள்ளார் தீபக் தேவ். ஸ்டண்ட் சில்வாவின் ஆக்ஷன் காட்சிகளுக்கு சபாஷ் சொல்லலாம். சில இடங்களில் திரைக்கதையில் தொய்வு இருந்தாலும், பரபரப்பான காட்சிகள் அதை மறக்கடித்து விடுகின்றன. சில காட்சிகளின் நீளம் தேவையற்றது. அரசியலையும், சமூக அக்கிரமங்களையும் இணைத்து விறுவிறுப்பும், பரபரப்பும் நிறைந்த கதையாக உருவாக்கி, மீண்டும் இயக்குனராக தனது முத்திரையை அழுத்தமாக பதித்துள்ளார் பிருத்விராஜ். கிளைமேக்ஸ் எதிர்பாராதது.

மூலக்கதை