நான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரானால் ரோகித் சர்மாவை 20 கி.மீ.. - யோக்ராஜ் சிங்

மும்பை, சமீபத்தில் முடிவடைந்த ஆஸ்திரேலியாவுக்கு பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி, 10 ஆண்டுக்கு பிறகு 'பார்டர் - கவாஸ்கர்' கோப்பையை பறிகொடுத்தது. மேலும் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்தியா ஒயிட்வாஷ் ஆனது. அதனால் தொடர்ந்து 3-வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இந்தியா இழந்தது.இந்த தோல்விகளுக்கு இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்கள். பெரிய அளவில் ரன் குவிக்காத அவர்களால்தான் இந்திய அணி தோல்வியை தழுவியதாக ரசிகர்கள் முழுமையாக விமர்சித்தனர். மேலும் அவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்று சொந்த நாட்டு ரசிகர்களாலே கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.ஆனால் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத அவர்கள் சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்து தங்களது திறமையை நிரூபித்தனர். இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வந்தால் ரோகித் மற்றும் விராட் கோலியை அணியிலிருந்து நீக்க மாட்டேன் என்று முன்னாள் வீரர் மற்றும் யுவராஜ் சிங் தந்தையான யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "என்னை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமித்தால், இந்த வீரர்களை பயன்படுத்தி, பல ஆண்டுகள் தோற்கடிக்க முடியாத அணியாக இந்தியாவை மாற்றுவேன். அவர்களின் திறமைகளை யார் வெளிக்கொணர்வார்கள்? ஏனென்றால் மக்கள் எப்போதும் அவர்களை அணியிலிருந்து வெளியேற்றத் தயாராக இருக்கிறார்கள். ரோகித் சர்மாவை நீக்குங்கள் அல்லது கோலியை நீக்குங்கள் என்று பேசுகின்றனர். ஆனால் ஏன்? நீக்க வேண்டும். அவர்கள் ஒரு கடினமான சூழ்நிலையை கடந்து செல்கிறார்கள். நான் உங்களுடன் இருக்கிறேன் என்று அந்த குழந்தைகளிடம் (ரோகித் மற்றும் விராட்) சொல்ல விரும்புகிறேன். மேலும் அவர்களிடம் ரஞ்சி டிராபி விளையாடுங்கள் என்று சொல்வேன். இல்லையெனில் ரோகித்தை 20 கி.மீ ஓட வைப்பேன். யாரும் அப்படி செய்வதில்லை. இந்த வீரர்கள் வைரங்கள். நீங்கள் அவர்களை வெளியே தூக்கி எறிய வேண்டாம். நான் அவர்களின் தந்தையைப் போல இருப்பேன். தோனி உட்பட யுவராஜ் சிங்கையும் மற்ற வீரர்களையும் நான் ஒருபோதும் வேறுபடுத்தி பார்த்ததில்லை. ஆனால் தவறு என்றால் தவறு என்றுதான் சொல்வேன்" என்று கூறினார்.
மூலக்கதை
