வருங்கால முதல்-அமைச்சர் புஸ்சி ஆனந்த் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

  தினத்தந்தி
வருங்கால முதல்அமைச்சர் புஸ்சி ஆனந்த் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

சென்னை,தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க இருக்கிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. சட்டசபை தேர்தலை கூட்டணி வைத்து சந்திப்பதா? அல்லது தனித்து போட்டியிடுவதா? என்பது குறித்து இந்த பொதுக்குழுவில் விவாதித்து முடிவு எடுக்கப்படுகிறது.இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு பொதுக்குழு கூடுகிறது. இதையொட்டி பொதுக்குழு கூட்டம் நடக்கும் திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையம் முழுவதும் கட்சியின் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலை வகிக்கிறார். பகல் 11 மணியளவில் தீர்மானங்கள் வாசிக்கப்பட இருக்கிறது. கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் பல முக்கிய தீர்மானங்கள் இடம் பெற இருக்கிறது. கூட்டணி தொடர்பாக, நிர்வாகிகளிடம் கருத்து கேட்கும் விஜய் 12 மணியளவில் பேசுகிறார். இதில் தமிழக வெற்றிக்கழகத்தின் அடுத்த கட்ட நகர்வு குறித்து முக்கிய முடிவுகளை விஜய் அறிவிக்கிறார். இந்த நிலையில், தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்தை வருங்கால முதல்-அமைச்சர் எனக் கூறி சென்னையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை புறநகர் மாவட்டச் செயலாளர் ஈ.சி.ஆர். சரவணன் பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் மதிப்புமிகு தளபதி அவர்களை பொதுக்குழுவிற்கு அழைத்து வரும் தளபதி நெஞ்சில் குடியிருக்கும் எங்களின் அரசியல் ஆசாம் தவெக பொதுச்செயலாளர்.. வருங்கால தமிழக முதல்-அமைச்சர் அவர்களே வருக! வருக!! வருக!!! என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தவெக சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன் கூறுகையில், "அந்த போஸ்டருக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை; வேறு கட்சியை சார்ந்தவர்கள் யாராவது இதை செய்து இருக்கலாம் வேண்டும் என்றே இது போன்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளனர்; முதுகில் குத்தும் வகையில் இப்படி செய்துள்ளனர்" என்று கூறினார்.

மூலக்கதை