காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல்: ஹமாஸ் செய்தித்தொடர்பாளர் உள்பட 38 பேர் பலி

  தினத்தந்தி
காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல்: ஹமாஸ் செய்தித்தொடர்பாளர் உள்பட 38 பேர் பலி

காசா சிட்டி,காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்கு புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த போரில் காசா முனையில் இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது. பணய கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. இஸ்ரேல், ஹமாஸ் இடையே கடந்த சில வாரங்களாக போர் நிறுத்தம் அமலில் இருந்தது.அதேவேளை, ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் 59 பேர் பணய கைதிகளாக உள்ளனர். இதில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் தோல்வியடைந்த நிலையில் இரு தரப்பும் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளன. அந்த வகையில் காசா முனைவின் பல்வேறு பக்குதிகள் மீது இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் செய்தித்தொடர்பாளர் அப்தலிப் அல் குவானு உள்பட 38 பேர் உயிரிழந்தனர்.

மூலக்கதை