'பாகிஸ்தானின் மதவெறி மனநிலையை இந்தியாவால் மாற்ற முடியாது' - மத்திய மந்திரி ஜெய்சங்கர்

இஸ்லாமாபாத்,நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-"பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் நிலையை இந்தியா மிக உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இந்த விவகாரத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவித்துள்ளது. ஆனால் பாகிஸ்தானின் மதவெறி மனநிலையை இந்தியாவால் மாற்ற முடியாது.பாகிஸ்தானில் கடந்த மாதம் இந்துக்கள் தாக்கப்பட்ட 10 சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இதில் 7 சம்பவங்கள் கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்றம் தொடர்பானவை, 2 சம்பவங்கள் கடத்தல் தொடர்பானவை. மேலும் ஒரு சம்பவத்தில் ஹோலி கொண்டாடிய மாணவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சீக்கிய சமூகத்தினருக்கு எதிராகவும் 3 அத்துமீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. முதல் சம்பவத்தில் ஒரு சீக்கிய குடும்பம் தாக்கப்பட்டது, மற்றொரு நிகழ்வில் ஒரு பழைய குருத்வாராவை மீண்டும் திறந்ததற்காக ஒரு சீக்கிய குடும்பம் அச்சுறுத்தப்பட்டது. மேலும் ஒரு சம்பவம் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை கடத்தி மதம் மாற்றியது தொடர்பானது."இவ்வாறு ஜெய்சங்கர் தெரிவித்தார்.
மூலக்கதை
