நெல்லை: 2011-ம் ஆண்டு கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை-நீதிபதி தீர்ப்பு

  தினத்தந்தி
நெல்லை: 2011ம் ஆண்டு கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனைநீதிபதி தீர்ப்பு

நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அருகே வீரவநல்லூரில் கடந்த 2000-ம் ஆண்டு வயலில் மாடு மேய்ப்பது சம்பந்தமாகவும் ஒரு தரப்பினரின் வளர்ச்சி மற்றொரு தரப்பினருக்கு பிடிக்காமலும் ஏற்பட்ட முன்பகை காரணமாக கடந்த 2000, 2001, 2009, 2011 மற்றும் 2013ம் ஆண்டு என வரிசையாக நடைபெற்ற 5 கொலை வழக்குகளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கடந்த 2009-ம் ஆண்டில் வீரவநல்லூரைச் சேர்ந்த ஐயப்பன் கொலை சம்பவத்திற்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக 21.6.2011 அன்று வீரவநல்லூரைச் சேர்ந்த சந்தானம் மகன் சுப்பையாதாஸ் (வயது 38), பொன்னையாதாஸ் மகன் சுரேஷ் (வயது 37), அருணாச்சலம் மகன் சுரேஷ் (வயது 37), கொம்பன் மகன் கொம்பையா (வயது 38) மற்றும் 17 நபர்கள் சேர்ந்து வீரவநல்லூர் பசும்பொன் தெருவைச் சேர்ந்த சிதம்பரம் மகன் ரத்தினவேல்பாண்டியனை அரிவாளால் தாக்கி கொலை செய்தனர். இது சம்பந்தமாக இறந்துபோன ரத்தினவேல் பாண்டியன் மகன் வெள்ளத்துரை அளித்த புகாரின்பேரில் வீரவநல்லூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மேற்சொன்ன 21 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தபோது கடந்த 12 ஆண்டுகளாக முன்னேற்றம் இல்லாமல் இருந்த நிலையில், அவ்வழக்கின் விசாரணையை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் துரிதப்படுத்தி சாட்சிகளை விரைந்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து விசாரணை முடிந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் (26.3.2025) இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பத்மநாபன் தீர்ப்பு வழங்கினார். அதில் இவ்வழக்கில் தொடர்புடைய சுப்பையாதாஸ், சுரேஷ், கொம்பையா, சுரேஷ் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.1000 அபராதம் விதித்து அவர் உத்தரவிட்டார். வரிசையாக நடைபெற்ற 5 கொலை வழக்குகளில் இதுவே தண்டனை வழங்கப்பட்ட முதல் வழக்காகும். இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த சேரன்மகாதேவி டி.எஸ்.பி. சத்யராஜ் மற்றும் வீரவநல்லூர் போலீசாரை நெல்லை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார். மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2 1/2 மாதங்களில் ஏற்கனவே நடைபெற்ற ஜாதிய கொலைகள், பழிக்கு பழியான கொலைகள் போன்ற முக்கிய கொலை வழக்குகள் மற்றும் வீரவநல்லூரில் ஏற்கனவே நடைபெற்ற மற்றொரு கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டு வீரவநல்லூர் அருகே உப்புவாணிமுத்தூர் ஊரில் நடந்த 5 கொலை வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், பாளையஞ்செட்டிக்குளத்தில் ஒரே சமுதாயத்தினர் இடையே நடைபெற்ற கொலை வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கோபாலசமுத்திரம் பகுதியில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற ஜாதிய கொலை வழக்கையும் துரிதப்படுத்தி 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட காவல் துறையின் துரித நடவடிக்கையால் 2025-ம் ஆண்டு மட்டும் இதுவரை 12 கொலை வழக்குகளில் தொடர்புடைய ஒருவருக்கு மரண தண்டனையும், 41 பேருக்கு (14 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்பட) ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை