சுழற்பந்துக்கு எதிராக விராட் கோலி தடுமாறுகிறாரா..? தினேஷ் கார்த்திக் பதில்

  தினத்தந்தி
சுழற்பந்துக்கு எதிராக விராட் கோலி தடுமாறுகிறாரா..? தினேஷ் கார்த்திக் பதில்

சென்னை, ஐ.பி.எல். தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல். வரலாற்றில் பலம் வாய்ந்த இரு அணிகள் மோத உள்ளதால் இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு அதிகமாக உதவும். அதனால் நூர் அகமது, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகியோரது பந்து வீச்சு சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவர்களை சமாளிப்பதை பொறுத்தே பெங்களூரு அணியின் வெற்றி அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் கலந்து கொண்டார். அவரிடம் விராட் கோலி சமீப காலங்களாக சுழற்பந்து வீச்சுக்கு தடுமாறி வருவது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தினேஷ் கார்த்திக், "விராட், சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக ஆடி முடித்து விட்டு வருகிறார். சமீப காலங்களில் குறிப்பாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சுழற்பந்துக்கு எதிராக சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார். எனவே, முந்தைய புள்ளிவிவரங்களுக்குள் நான் அதிகம் செல்ல விரும்பவில்லை. சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன் குவித்த இந்தியர்களின் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்தார். அது சுழற்பந்து வீச்சை நன்றாக எதிர்கொள்ளாமல் வராது. ஏனென்றால், துபாய் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எவ்வளவு உதவும் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அவர் மிகவும் விழிப்புடன் இருந்தார். எனவே எப்போதும் போலவே அவர் சிறப்பாக பேட்டிங் செய்கிறார் என்று நான் நம்புகிறேன்.இப்போது கூட தன்னுடைய பேட்டிங்கில் கூடுதலாக ஒரு ஷாட்டை சேர்க்க முயற்சித்து வருகிறார். அது அவருடைய சாதிக்கும் வேட்கையை காட்டுகிறது. அவர் தொடர்ந்து முன்னேற விரும்புகிறார். அவர் ஒரு சிறப்பு வாய்ந்த வீரர். தற்சமயம் நான் பார்க்கும்போது அவர் ஐ.பி.எல்.-ல் இதுவரை இல்லாத அளவுக்கு நம்பிக்கையுடனும் சிறப்பாகவும் பேட்டிங் செய்கிறார்" என்று கூறினார்.

மூலக்கதை