ஐதராபாத்துக்கு எதிராக அபார ஆட்டம்: ஆரஞ்சு, ஊதா நிற தொப்பியை வென்ற லக்னோ வீரர்கள்

ஐதராபாத், நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 47 ரன்கள் அடித்தார். லக்னோ தரப்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.பின்னர் 191 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி 16.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார். சிறப்பாக பந்துவீசிய ஷர்துல் தாகூர் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.இந்த ஆட்டத்தில் அபாரமான செயல்பாட்டை வெளிப்படுத்திய நிக்கோலஸ் பூரன் அதிக ரன் குவித்த வீரர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றினார். முதலிடத்தில் இருந்த டிராவிஸ் ஹெட்டை பின்னுக்கு தள்ளி ஆரஞ்சு தொப்பியை தன்வசப்படுத்தினார். 2 ஆட்டங்களில் விளையாடியுள்ள பூரன் 145 ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். இது ஒவ்வொரு ஆட்டத்தை பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரருக்கு வழங்கப்படும் ஊதா நிற தொப்பியை ஷர்துல் தாகூர் வசப்படுத்தியுள்ளார். 2 ஆட்டங்களில் ஆடி 6 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.2-வது இடத்தில் சென்னை அணியின் நூர் அகமது (4 விக்கெட்டுகள்) உள்ளார்.
மூலக்கதை
