சேலம் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான விரிவான சாத்திய குழு அறிக்கை பரிசீலனையில் உள்ளது: தமிழக அரசு

  தினத்தந்தி
சேலம் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான விரிவான சாத்திய குழு அறிக்கை பரிசீலனையில் உள்ளது: தமிழக அரசு

சென்னை,தமிழக சட்டசபையில், திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை ஆகிய துறைகளுக்கான கொள்கை விளக்கக் குறிப்பு முன்வைக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு:-அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து துறைக்கான தீர்வாக கோவை, மதுரை, சேலம், திருச்சி மற்றும் நெல்லை ஆகிய 2-ம் நிலை நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டங்களை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை தயாரிக்கப்பட்டன. அந்த ஆய்வு அறிக்கைகளை அரசுக்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சமர்ப்பித்து உள்ளது.நெல்லை நகரத்தை பொறுத்தவரை, பெருந்திரள் துரித போக்குவரத்து அமைப்பை ஏற்படுத்த உகந்ததல்ல என அந்த விரிவான சாத்திய குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சேலம் நகரத்தைப் பொறுத்தவரை விரிவான சாத்திய குழு அறிக்கை, அரசின் பரிசீலனையில் இருந்து வருகிறது.சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் கட்டம்-2 திட்டத்தை செயல்படுத்துவதற்காக அரசுக்கு ஏற்படும் அதிக நிதி சுமையை கருத்தில் கொண்டு திருச்சிக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் பின்னர் தொடரலாம் என முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. கோவை சிங்காநல்லூரில் 28.36 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு அரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பெண்களுக்கு உரிய தரமான வேலைவாய்ப்பு திட்டம் ஒன்று ரூ.50 லட்சம் செலவில் ஒப்பந்த அடிப்படையிலான நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை