பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம்

சென்னை, பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே அ.தி.மு.க .முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில தினங்களுக்கு முன் டெல்லி சென்று உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்த நிலையில் செங்கோட்டையன் திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இடையே கருத்து வேறுபாடு எழுந்தன. இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சிகளில் செங்கோட்டையன் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார். அதேபோல் எடப்பாடி பழனிசாமி பெயரையும் கூறாமல் இருந்தார்.சட்டசபை கூட்டத்தில் கூட செங்கோட்டையன் - எடப்பாடி பழனிசாமி இடையில் சுமூக நிலை இல்லாமல் இருந்தது. இதன்படி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்திலும் பங்கேற்காமல் தவிர்த்தார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசுகையில், செங்கோட்டையன் ஏன் பேசவில்லை என்று அவரிடமே கேளுங்கள் என்று பதில் அளித்து அதிர்ச்சி கொடுத்தார். இதன் மூலமாக எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் இடையில் மோதல் இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அ.தி.மு.க. அலுவலகத்தை பார்ப்பதற்காக டெல்லிக்கு சென்றதாக கூறிய அவர், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்தார். அவருடன் சி.வி. சண்முகம், கே.பி. முனுசாமி, தம்பிதுரை உள்ளிட்ட நிர்வாகிகளும் இருந்தனர். இதனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமையும் என்று பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. - பா.ஜ.க. ஆகிய இரு தரப்பும் இதனை உறுதி செய்யாத நிலையில், அ.தி.மு.க.வில் பரபரப்பான சூழல் இருந்து வருகிறது. இந்த நிலையில் செங்கோட்டையன், திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். ஏற்கனவே மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். டெல்லி சென்ற செங்கோட்டையன் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்தாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரே நாளில் டெல்லி சென்றுவிட்டு செங்கோட்டையன் அவசரமான தமிழ்நாடு திரும்பி வருவதற்கான காரணம் என்ன என்று அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது.இந்நிலையில் சேலத்தில் செங்கோட்டையனின் டெல்லி பயணம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி, பதிலளிக்காமல் கையெடுத்து கும்பிட்டபடி நகர்ந்து சென்றார்.
மூலக்கதை
