டெல்லி நீதிபதி அலகாபாத் ஐகோர்ட்டுக்கு மாற்றம் - உறுதி செய்த மத்திய அரசு

புதுடெல்லி, டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கடந்த 14-ந்தேதி கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து ஐகோர்ட்டு தலைமை நீதிபதி விசாரணை நடத்தி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு அறிக்கை அளித்தார்.அதன்படி இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 3 நீதிபதிகள் குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமைத்துள்ளார். அத்துடன் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு சட்டப்பணிகள் எதையும் ஒதுக்கக்கூடாது என டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கும் அவர் உத்தரவிட்டார்.இதற்கிடையே நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. கொலீஜியத்தின் இந்த பரிந்துரையை ஏற்று நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டது.மத்திய அரசு இது குறித்து வெளியிட்டிருக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியின் ஆலோசனையுடன், நாட்டின் ஜனாதிபதி, டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவை, அலகாபாத் ஐகோர்ட்டுக்கு பணியிட மாற்றம் செய்ய உத்தரவிடுவதாகவும், யஷ்வந்த் வர்மா நேரடியாக அலகாபாத் ஐகோர்ட்டு சென்று தனது பணியை ஏற்றுக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி யஷ்வந்த் வர்மா ஏற்கனவே அலகாபாத் ஐகோர்ட்டில் இருந்துதான் டெல்லி ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டு இருந்தார். தற்போது அவர் மீண்டும் அலகாபாத்துக்கு மாற்றப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல், அவரை இடமாற்றம் செய்வதற்கு வக்கீல் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக அலகாபாத் ஐகோர்ட்டு வக்கீல்கள் கடந்த 25-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திலும் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி நீதிபதி யஷ்வந்த் வர்மாவை இடமாற்றம் செய்யும் பரிந்துரையை திரும்பப்பெறுமாறு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவை நேற்று முன்தினம் பல்வேறு மாநில வக்கீல் சங்க பிரதிநிதிகள் நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.இதில் கலந்து கொண்ட அலகாபாத், குஜராத், கேரளா, ஜபல்பூர், கர்நாடகா மற்றும் லக்னோ ஐகோர்ட்டுகளின் வக்கீல் சங்க பிரதிநிதிகள் பின்னர் சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியத்தில் உறுப்பினராக இருக்கும் பிற நீதிபதிகளான கவாய், சூர்ய கந்த், அபய் ஓகா மற்றும் விக்ரம் நாத் ஆகியோரையும் சந்தித்து பேசினர். இவ்வாறு நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் இடமாற்றத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியபோதும், அவரது இடமாற்றத்தை மத்திய அரசு உறுதி செய்திருப்பது நீதித்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதனிடையே நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் வீட்டில் பணம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி வக்கீல் மேத்யூஸ் ஜே நெடும்பாறை மற்றும் 3 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டுமென மனுதாரர்கள் வலியுறுத்திய நிலையில் சுப்ரீம் கோர்ட்டு அதை மறுத்துவிட்டது.இந்த நிலையில் இந்த மனு நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் "இந்த விவகாரம் தொடர்பாக 3 நீதிபதிகளை கொண்ட குழு விசாரணை நடத்தி வருவதால் தற்போது இந்த மனு பரிசீலனைக்கு உகந்தது அல்ல" எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
மூலக்கதை
