மொழியை வைத்து குறுகிய அரசியல் செய்யும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - யோகி ஆதித்யநாத் மீண்டும் தாக்கு

  தினத்தந்தி
மொழியை வைத்து குறுகிய அரசியல் செய்யும் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின்  யோகி ஆதித்யநாத் மீண்டும் தாக்கு

லக்னோ,தேசிய கல்விக்கொள்கையில் இடம்பெற்ற மும்மொழிக் கொள்கையை இந்து திணிப்பு என தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதனால் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2000 கோடி வரையிலான கல்வி நிதியை மத்திய அரசு தர மறுத்துவிட்டது. இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மொழியை வைத்து குறுகிய அரசியல் செய்வதாக பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மீண்டும் விமர்சித்துள்ளார்.சமீபத்தில் தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுப்பது குறித்து யோகி ஆதித்யநாத் விமர்சித்திருந்த நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் மீண்டும் அதே விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது:-உத்தரப் பிரதேச பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி போன்ற மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இதனால் உத்தரப் பிரதேசம் பாதிக்கப்பட்டுவிட்டதா? புதிய வேலைகளுக்கான வாய்ப்புகள் மாநிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு மொழிகளைக் கற்றுக்கொள்வது ஒரு மாநிலத்தின் முக்கியத்துவத்தைக் குறைக்காது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மொழி சர்ச்சையை குறுகிய அரசியல் நலன்களுக்காக உருவாக்குகிறார்கள். இதன்மூலம் அவர்கள் தங்கள் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளலாம். ஆனால் இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கிறார்கள். உ.பி.யில், பல மொழிகளைக் கற்பிக்கிறோம், அதனால் உத்தர பிரதேசம் சிறியதாகிவிட்டதா?. மாறாக உத்தர பிரதேசத்தில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.ஒவ்வொருவரும் இந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், மரியாதை அளிக்கிறார்கள் அதனால்தான் இந்தியா மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளது. ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த சிறப்பு உள்ளது. இந்தியாவின் பழமையான மொழிகளான தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தை ஒன்றிணைக்கும் காசி தமிழ் சங்கமம் உத்தர பிரதேசத்தில் நடந்தது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.இவ்வாறு அவர் கூறினார்.மொழிகள் குறித்த சர்ச்சைக்காக பாஜக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மறைமுகமாக சாடுவது இது இரண்டாவது முறை ஆகும்.முன்னதாக யோகி ஆதித்யநாத்தின் முந்தைய விமர்சனத்துக்கு பதிலளித்திருந்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், "எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. மொழி திணிப்பையும் ஆதிக்கத்தையுமே நாங்கள் எதிர்க்கிறோம். வாக்கு வங்கி அரசியலுக்காக பேசவில்லை. இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம். வெறுப்பு குறித்து யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை