வக்பு வாரிய திருத்த மசோதா நாளை தாக்கல்: பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு அதிரடி உத்தரவு

  தினத்தந்தி
வக்பு வாரிய திருத்த மசோதா நாளை தாக்கல்: பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு அதிரடி உத்தரவு

புதுடெல்லி, வக்பு சொத்துகளை ஒழுங்குபடுத்துவதற்காக, வக்பு சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். அந்த மசோதா, முஸ்லீம்களுக்கு எதிரானது என்றும், வக்பு சொத்துகளை முறைகேடாக அபகரிக்கும் நோக்கம் கொண்டது என்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.அதனால், நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. அக்குழு, பல்வேறு திருத்தங்களுடன் மசோதாவையும், தனது அறிக்கையையும் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இதன்படி கூட்டுக்குழுவில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் முன்வைத்த 14 திருத்தங்கள் மட்டும் ஏற்கப்பட்டன.இந்நிலையில், ரம்ஜான் விடுமுறைக்கு பிறகு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் தொடங்கியது. வரும் 4-ந் தேதியுடன் இந்த கூட்டத்தொடர் முடிவடைகிறது. இந்த சூழலில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வரும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நாளை (புதன்கிழமை) மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் பா.ஜ.க. எம்பிக்கள் மற்றும் சமாஜ்வாடி கட்சி எம்.பி.க்கள் அனைவரும் நாள் முழுவதும் அவையில் இருக்க வேண்டுமென பா.ஜ.க. கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார். 'கொறடா' என்பது அரசியல் கட்சிகள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கும் முறையான எழுத்துப்பூர்வ உத்தரவு ஆகும், இது நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றங்களில் முக்கியமான வாக்கெடுப்புகளுக்கு அவர்கள் ஆஜராக வேண்டும் என்றும், கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டிற்கு ஏற்ப வாக்களிக்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்துகிறது.இதற்கிடையில், வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வக்பு மசோதா தாக்கல் குறித்து மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு கூறுகையில், "1-ந் தேதி நாடாளுமன்றம் கூடிய பிறகு, திருத்தப்பட்ட வக்பு மசோதாவை தாக்கல் செய்வதற்கான நேரம் முடிவு செய்யப்படும். அநேகமாக, 2-ந் தேதி (புதன்கிழமை) தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. கூடிய விரைவில் மசோதாவை நிறைவேற்ற விரும்புகிறோம். 4-ந் தேதியுடன் கூட்டத்தொடர் முடிவடைவதால், இரு அவைகளிலும் நிறைவேற்றினால்தான் அது சட்டமாக மாறும். வக்பு மசோதாவுக்கு சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மக்களிடம் பொய்களை பரப்பி, பதற்றத்தை விதைத்து வருகின்றன. முஸ்லீம்களை வீதிக்கு வந்து போராடுமாறு தூண்டுவது நாட்டுக்கு நல்லது அல்ல. வக்பு மசோதா, சட்டமாக மாறினால், மசூதிகள் போன்ற முஸ்லீலிம் சொத்துகளை மத்திய அரசு பறித்துக் கொள்ளும் என்று பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. இந்த மசோதா, பெரும்பாலான முஸ்லீம்கள் நலன்களுக்கு ஏற்றது. வக்பு சொத்துகளை சுரண்டும் சில தலைவர்கள் மட்டுமே எதிர்க்கின்றனர். வக்பு மசோதாவை ஆளும் கூட்டணி மட்டுமின்றி, 'இந்தியா' கூட்டணியை சேர்ந்த சில எம்.பி.க்களும் ஆதரிக்கின்றனர். கேரள கத்தோலிக்க பேராயர்கள் கவுன்சில் போன்ற அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இவ்வளவு விரிவான ஆலோசனைக்கு பிறகு எந்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது இல்லை" என்று அவர் தெரிவித்திருந்தார்.

மூலக்கதை