வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு

டெல்லி,இந்தியாவில் உள்ள வக்பு வாரிய சொத்துக்களை நிர்வகிப்பது மற்றும் ஒழுங்குபடுத்துவது தொடர்பாக மத்திய அரசு வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இந்த திருத்தம் நாளை நாடாளுமன்றத்தில் மசோதாவாக தாக்கல் செய்யப்பட உள்ளது.முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கூட்டுக்குழு மசோதாவில் சில திருத்தங்களை மேற்கொண்டது. அதேவேளை, மசோதாவில் 44 திருத்தங்களை கொண்டுவர எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், அந்த கோரிக்கை அனைத்தும் நிராகரிக்கப்பட்டது. பாஜக அரசு முன்வைத்த 14 திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மசோதா மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. நாளை மதியம் 12 மணிக்கு மக்களவையில் மசோதா அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்பின்னர், மசோதா மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதையடுத்து, நாளைய நாடாளுமன்ற நடவடிக்கையில் கட்டாயம் கலந்துகொள்ளுமாறு பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்களுக்கு அக்கட்சிகளின் கொறாடாக்கள் உத்தரவிட்டுள்ளனர்.இந்நிலையில், வக்பு சட்டத்திருத்த மசோதா தொடர்பாக காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி இன்று ஆலோசனை நடத்தினர். எதிர்க்கட்சிகளின் இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், மார்சிஸ்டு கம்யூனிஸ்டு, சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) கட்சிகளின் எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மசோதா மீதான விவாதத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அதேவேளை மசோதா மீதான வாக்கெடுப்பில் அதற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மூலக்கதை
