குஜராத் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

காந்திநகர்,குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டம் டீசா பகுதியில் பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த பட்டாசு ஆலையில் இன்று வழக்கம்போல் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் வேலை செய்து வந்தனர்.இந்நிலையில், பட்டாசு ஆலையில் இன்று காலை 9.45 மணியளவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் பட்டாசு ஆலை தீ மளமளவென பரவியது. மேலும், அந்த ஆலையின் மேற்கூரை இடிந்து தரைமட்டமானது. இந்தச் சம்பவத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. வெடிவிபத்தைத் தொடர்ந்து கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள். அவர்களில் பெரும்பாலானோர் மேற்கூரை சரிந்ததால் இறந்தனர் என்று காவல் கண்காணிப்பாளர் அக்ஷய்ராஜ் மக்வானா தெரிவித்துள்ளார்.இந்தச் சம்பவம் குறித்து முதல்-மந்திரி பூபேந்திர படேல் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தீசாவில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் தொழிலாளர்கள் இறந்த நிகழ்வு மனதை வாட்டுகிறது. இந்த துயரமான நேரத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவியும் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு விரைவில் சரியான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.
மூலக்கதை
