பைக்கில் சென்றபோது விபத்து: இடுப்பில் வைத்திருந்த மதுபாட்டில்கள் நொறுங்கி குத்தி பள்ளி மாணவன் உயிரிழப்பு

  தினத்தந்தி
பைக்கில் சென்றபோது விபத்து: இடுப்பில் வைத்திருந்த மதுபாட்டில்கள் நொறுங்கி குத்தி பள்ளி மாணவன் உயிரிழப்பு

ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவன் ஒருவன், பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி முடித்திருந்தான். இவனுடைய நண்பன் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு பைக்கில் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சுற்றுச்சாலையில் உள்ள மதுபான கடைக்கு சென்று மதுபாட்டில்கள் வாங்கி உள்ளனர்.அந்த மதுபாட்டில்களை பள்ளி மாணவன் தனது வயிற்று பகுதியில் செருகி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் பைக்கில் சென்றுள்ளனர். தொருவளூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த மினி சரக்கு வாகனமும், சிறுவர்கள் சென்ற பைக்கும் மோதிக்கொண்டன. இதில் அவர்கள் இருவரும் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டனர்.இதில் பின்னால் அமர்ந்திருந்த பள்ளி மாணவன் வயிற்று பகுதியில் வைத்திருந்த மது பாட்டில்கள் நொறுங்கி, அவனது வயிற்றை குத்திக்கிழித்தன. இதில் ரத்த வெள்ளத்தில் மாணவன் உயிருக்கு போராடினான். இதே போல் பைக்கை ஓட்டிச்சென்ற சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஓடிவந்து, இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். அவனது நண்பனுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை