நெல்லை: சுட்டெரித்த வெயிலுக்கு தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

நெல்லை, நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள சிந்தாமணி நடுத்தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 55). ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.அவரது ஆதார் அட்டையில் கைரேகையை புதுப்பிக்க முடிவு செய்த கணேசன், நேற்று காலை நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள இ-சேவை மையத்திற்கு வந்தார்.ஏற்கனவே நெல்லை மாநகர பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. நேற்று 98.5 டிகிரி வெயில் பதிவானது. இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தின் வளாகத்திற்குள் கணேசன் நடந்து சென்றபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடி வந்து கணேசன் முகத்தில் தண்ணீர் தெளித்தனர். ஆனாலும் அவருக்கு மயக்கம் தெளியவில்லை. இதனால் அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க ஆம்புலன்சை வரவழைத்தனர். ஆனால் அவர்கள் வந்து பரிசோதித்தபோது, கணேசன் இறந்துவிட்டது தெரியவந்தது.அவர் கடுமையான வெயிலின் தாக்கத்தால் சுருண்டு விழுந்து இறந்தாரா அல்லது உடல் நலக்குறைவு ஏதேனும் ஏற்பட்டு இறந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலக்கதை
