சென்னை அணி வெற்றி பாதைக்கு திரும்ப ஆலோசனைகளை வழங்கிய ஸ்ரீகாந்த்

  தினத்தந்தி
சென்னை அணி வெற்றி பாதைக்கு திரும்ப ஆலோசனைகளை வழங்கிய ஸ்ரீகாந்த்

சென்னை,10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 13லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் பெங்களூருவில் இன்று நடக்கும் 14வது லீக் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்கிறது.இந்த தொடரில் 5 முறை சாம்பியனான சென்னை அணி இதுவரை 3 போட்டிகளில் ஆடி 1 வெற்றி, 2 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. தொடர் தோல்விகளுக்கு சென்னை அணியின் பேட்டிங் சிறப்பாக இல்லாததே காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக அடித்து நொறுக்க வேண்டிய தொடக்க ஜோடி ரன்கள் குவிக்காமல் தடுமாறி வருகிறது.இந்நிலையில், சென்னை அணி வெற்றிப்பாதைக்கு திரும்ப இந்திய முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் சில ஆலோசனைகளை வழங்கி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில் பேசியதாவது, ஓவர்டன் இடத்தில் டெவான் கான்வே விளையாட வேண்டும். அத்துடன் அன்சுல் கம்போஜை பிளேயிங் லெவனுக்குள் கொண்டு வாருங்கள். அஸ்வினை பொறுத்த வரை அவரை அணியிலிருந்து நீக்காதீர்கள். ஆனால், பவர்பிளே ஓவர்களில் அவர் பவுலிங் செய்வதை நிறுத்துங்கள்.7 முதல்18 வரையிலான ஓவர்களில் அவர் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவராக இருப்பார். ஜடேஜா, நூர் அஹ்மத், அஸ்வின் ஆகியோர் எளிதாக 10 ஓவர்களைக் கடத்தி விடுவார்கள். நானாக இருந்தால் ராகுல் திரிபாதியை நீக்கி விட்டு கம்போஜை கொண்டு வருவேன். அதேபோல், ஓவர்டனுக்கு பதிலாக கான்வேயை விளையாட வைப்பேன். அதே போல ஷிவம் துபேவை முதன்மை அணிக்குள் கொண்டு வருவேன். ஆண்ட்ரே சித்தார்த்தை இம்பேக்ட் வீரராக பயன்படுத்தலாம். முகேஷ் சவுத்ரியும் நல்ல ஆப்ஷன். கடந்த காலங்களில் அவர் சென்னை அணிக்காக அசத்தியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை