உடை மாற்றும் போது அத்துமீறிய இயக்குனர் - கசப்பான அனுபவத்தை பகிர்ந்த ஷாலினி பாண்டே

  தினத்தந்தி
உடை மாற்றும் போது அத்துமீறிய இயக்குனர்  கசப்பான அனுபவத்தை பகிர்ந்த ஷாலினி பாண்டே

தெலுங்கில் வெளியான 'அர்ஜூன் ரெட்டி' மூலம் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. இப்படத்தை தொடர்ந்து 100 சதவீதம் காதல், கொரில்லா, மகாநதி, சைலன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தென்னிந்திய சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்த இவர் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது தனுஷ் இயக்கி நடித்து இருக்கும் 'இட்லிக் கடை' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தநிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அவர் திரைத்துறையில் தனக்க நடந்த கசப்பான அனுபவத்தை பற்றி பகிர்ந்து கொண்டார். அதாவது, " ஒரு தெலுங்கு திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்தேன். அப்பொழுது எனக்கு 23 வயதே ஆனது. எனக்கு எந்த திரைப்பட பின்னணியும் இல்லை. அதுதான் என் திரைப்பட வாழ்க்கையின் ஆரம்ப நாட்கள். அந்த படத்தின் படப்பிடிப்பின் போது நான் கேரவனில் உடை மாற்றிக் கொண்டிருந்தேன், அப்போது இயக்குனர் வேண்டுமென்றே அத்துமீறி கேரவன் உள்ளே நுழைந்தார். அவர் வேண்டுமென்றே அப்படி செய்தார். என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் கோபமடைந்து, அவரை உரத்த குரலில் வெளியேறச் சொன்னேன். இந்த சினிமா துறையில் அதன் பிறகுதான் என்னை காப்பாற்றிக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை நானே கற்றுக் கொண்டேன். என்னுடைய திரைப்பட வாழ்க்கையில், நான் எத்தனை நல்லவர்களுடன் பணியாற்றி உள்ளேனோ, அதே அளவுக்கு சில கெட்டவர்களுடனும் பணியாற்றியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை