இறுதி கட்டத்தை எட்டுகிறதா அதிமுக-பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை?

சென்னை,அதிமுகவும், பாஜகவும் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதைத்தொடர்ந்து 2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலிலும் அந்த கூட்டணி தொடர்ந்தது.இந்தநிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுக தலைவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அதிமுக-பாஜக கூட்டணி முறிந்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் வெவ்வேறு அணிகளை கட்டமைத்து தேர்தலை சந்தித்தன. அதில் வெற்றி கிடைக்கவில்லை. இதையடுத்து பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி பலமுறை கூறிவந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை, எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அப்போது அ.தி.மு.க. மூத்த தலைவர்களும் உடன் இருந்தனர். இந்த சந்திப்புக்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. தமிழக பிரச்சினைகள் குறித்தே பேசினோம் என்றார்.எடப்பாடியைத் தொடர்ந்து அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனும் டெல்லி சென்று பாஜக முக்கிய தலைவர்களை சந்தித்து வந்தார். பின்னர் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமித்ஷா, அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடக்கிறது என்று கூறினார்.இந்த நிலையில் வருகிற 6-ந்தேதி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகிறார். அன்றைய தினம், மதுரையில் பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் தனித்தனியே சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இருவருக்கும் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்புகள் நடைபெறும் பட்சத்தில், அதிமுக-பாஜக கூட்டணி விஷயம் இறுதி கட்டத்தை எட்டும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மூலக்கதை
