திருமண பத்திரிகையை வைத்து திருடர்களை பிடித்த போலீஸ் - மராட்டியத்தில் ருசிகரம்

மும்பை, மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள கொடாலா பகுதியை சேர்ந்தவர் போரு காண்டு பின்னார்(30). இவர் கடந்த மாதம் 28-ந்தேதி பிக்-அப் வேனில் சென்று கொண்டிருந்தார். அவரிடம் ரூ.6,85,000 பணம் இருந்தது.அப்போது அடையாளம் தெரியாத 3 நபர்கள் அந்த வேனை வழிமறித்து, தங்கள் வாகனம் பழுதாகிவிட்டதாகவும், தங்களுக்கு உதவி செய்யுமாறும் கேட்டுள்ளனர். இதனை நம்பிய போரு பின்னார், அவர்கள் மூவரையும் வேனில் ஏற்றுமாறு டிரைவரிடம் கூறினார். அந்த சமயத்தில் 3 பேரும் கைவசம் மறைத்து வைத்திருந்த மிளகாய்ப் பொடியை வேனில் இருந்த இருவர் முகத்திலும் வீசியுள்ளனர். பின்னர் வேனில் இருந்த ரூ.6,85,000 பணத்தை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து ஜவ்கார் காவல்துறையினரிடம் போரு பின்னார் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக வழிப்பறி நடந்த இடத்திற்கு சென்று சோதனை செய்தபோது, அந்த இடத்தில் ஒரு திருமண பத்திரிகை போலீசாருக்கு கிடைத்தது. திருடர்கள் மிளகாய்ப் பொடியை எடுத்து வருவதற்கு அந்த பத்திரிகையை பயன்படுத்தியிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அந்த திருமண பத்திரிகை குறித்து போலீசார் விசாரிக்க தொடங்கினர். அந்த பத்திரிகையில் கிரண் ஆனந்த லாம்டே(23) என்ற நபரின் பெயர் இடம்பெற்றிருந்தது. அவரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையின் முடிவில், திருட்டு வழக்கில் தனக்கு தொடர்பு இருப்பதை அவர் ஒப்புக்கொண்டார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய தட்டு காண்டு பின்னார்(34), பரமேஸ்வர் கம்லகார் ஜோலே(24) மற்றும் பாஜிராவ் பெஹ்ரே(24) ஆகிய 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் தட்டு காண்டு பின்னார் என்பவர், பாதிக்கப்பட்ட போரு காண்டு பின்னாரின் சகோதரர் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்தான் இந்த திருட்டு சம்பவத்தில் மூளையாக செயல்பட்டுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. திருடப்பட்ட பணம் முழுவதும் கைதானவர்களிடம் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மூலக்கதை
