பஞ்சாப்பில் போதைபொருள் கடத்திய பெண் காவலர் கைது

சண்டிகர்,பஞ்சாப் மாநிலத்தை 3 மாத காலத்திற்குள் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றவிருப்பதாக முதல்-மந்திரி பகவந்த் மான் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ளூர் போலீசாசுடன் இணைந்து போதைப்பொருள் தடுப்புப் படை அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், பஞ்சாப் காவல்துறை 17.70 கிராம் ஹெராயினை கடத்திய பெண் காவலரை கைது செய்துள்ளதாக சண்டிகர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஹர்பன்ஸ் சிங் கூறியுள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது:-நேற்று மாலை பதிந்தாவில் உள்ள பாதல் மேம்பாலம் அருகே பெண் காவலர் அமன் தீப் கவுரின் வாகனத்தை மாநில போலீசாருடன் இணைந்து போதைப்பொருள் தடுப்புப்படையினர் சோதனை செய்தனர். அப்போது அவர் 17.70 கிராம் (ஹெராயின்) போதைப்பொருள் கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. பெண் காவலர் முன்னர் மான்சா பகுதியில் பணியாற்றி உள்ளார். தற்போது பதிந்தா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பணியாற்றி வந்துள்ளார். பெண் காவலர் மீது போதைப்பொருள் கடத்தல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
மூலக்கதை
