இந்தியாவில் 22 லட்சம் ஓட்டுநர்கள் பற்றாக்குறை: மக்களவையில் நிதின் கட்கரி தகவல்

புது டெல்லி, மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, ஓட்டுநர்களுக்கான பயிற்சி நிறுவனங்களை அமைப்பதற்காக மத்திய அரசு ரூ.4,500 கோடி மதிப்புள்ள திட்டத்தைத் தொடங்கியுள்ளதாக மத்திய போக்குவரத்து மந்திரி நிதின் கட்கரி கூறினார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது;உலக வங்கி அறிக்கையின்படி, இந்தியாவில் 22 லட்சம் ஓட்டுநர்கள் பற்றாக்குறை இருப்பதாக கூறுகிறது. நாட்டில் சரியான ஓட்டுநர் பயிற்சி வசதிகள் இல்லாதது பல விபத்துகளுக்கும் இறப்புகளுக்கும் வழிவகுக்கிறது. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நாடு முழுவதும் ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களை படிப்படியாக அமைக்க ரூ.4,500 கோடி திட்டத்தைத் தொடங்கியுள்ளது, இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இதுபோன்ற 1,600 நிறுவனங்களை அமைக்கும். இவை 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும். சாலை விபத்துகளால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.8 லட்சம் பேர் இறக்கின்றனர். பல விபத்துகள் பயிற்சி பெறாத ஓட்டுநர்களால் ஏற்படுகின்றன. ஓட்டுநர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (IDTRs), பிராந்திய ஓட்டுநர் பயிற்சி மையங்கள் (RDTCs) மற்றும் ஓட்டுநர் பயிற்சி மையங்கள் (DTCs) ஆகியவற்றை அமைப்பதற்கு பொருத்தமான திட்டங்களை அனுப்புமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.
மூலக்கதை
