ஊட்டி, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை தொடருமா..? தமிழ்நாடு அரசு எடுத்த முடிவு

  தினத்தந்தி
ஊட்டி, கொடைக்கானலில் இபாஸ் நடைமுறை தொடருமா..? தமிழ்நாடு அரசு எடுத்த முடிவு

சென்னை, சுற்றுலா தலமான ஊட்டி, கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் தினமும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கபட்டுள்ளது.இதன்படி ஏப்ரல் 1-ந் தேதி (நேற்று முன் தினம்) முதல் ஜூன் இறுதி வரை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8 ஆயிரம் சுற்றுலா வாகனங்களை மட்டுமே ஊட்டி, கொடைக்கானலுக்குள் அனுமதிக்குமாறு சென்னை ஐகோர்ட்டு கட்டுப்பாடு விதித்தது.அதன்படி, நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) முதல் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. ஒவ்வொரு நாளும் விண்ணப்பிக்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு அனுமதிக்கப்பட்டது. இந்த இ-பாஸ் நடைமுறையால், சுற்றுலா தொழில் கடுமையான பாதிக்கப்பட்டதோடு, உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஊட்டியில் வணிகர்கள் சங்கம் சார்பில் நேற்று (ஏப்ரல் 2ம் தேதி) கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால், அங்கு சென்ற சுற்றுலா பயணிகள் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.இந்நிலையில் இ-பாஸ் நடைமுறை குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழ்நாடு அரசு சென்னை ஐகோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்துள்ளது. அதில் எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். ஆய்வு முடிவுகளுக்கு பிறகு நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும், தற்போதைய வாகன கட்டுப்பாடு காரணமாக உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த மறு ஆய்வு மனு மீது நாளை (ஏப்ரல் 4ம் தேதி) விசாரணை நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மூலக்கதை