மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை,நாடாளுமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-மக்கள் தொகை கணக்கெடுப்புக் குறித்து இந்த அவையின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது வழக்கமான ஒன்று. கடந்த 2021-ம் ஆண்டு எடுக்கப்பட்டிருக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா கொடுந்தொற்றின் காரணமாக தள்ளிப் போய்விட்டது. ஆனால், அது குறித்து மத்திய அரசு எந்த முனைப்பையும் காட்டாமல் அமைதிகாப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பில்லாமல் வளர்ச்சி திட்டங்களையோ நலிந்த மக்களுக்கான நலத்திட்டங்களையோ நடைமுறைப்படுத்த முடியாது என்பதை இந்த அரசு நன்கு அறியும். அதுமட்டுமில்லாமல் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான மறுவரையறை செய்யப்பட வேண்டுமானால் மக்கள் தொகை கணக்கெடுப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதே போல மகளிருக்கான இடஒதுக்கீடு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் மக்கள் தொகை கணக்கெடுப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே, மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்துவதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும். அத்துடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்தே நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மூலக்கதை
