"கூட்டாட்சி என்ற சொல்லே மத்திய அரசுக்கு அலர்ஜி.." முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது அகில இந்திய 5 நாள் மாநாடு, மதுரை தமுக்கம் மைதானத்தில் நேற்று காலை தொடங்கியது.தொடக்க நிகழ்ச்சியாக வெண்மணி தியாகிகள் நினைவு செங்கொடியை, மத்தியக்குழு உறுப்பினர் வாசுகியிடம் இருந்து கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஏ.கே.பத்மநாபன் பெற்றுக்கொண்டார். அதன்பின்னர், மாநாட்டு செங்கொடியை மேற்கு வங்க மூத்த தலைவர் பிமன் பாசு ஏற்றி வைத்தார்.கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், திரிபுரா முன்னாள் முதல்-மந்திரியுமான மாணிக் சர்கார் தலைமை தாங்கினார்.அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத், மாநாட்டை தொடங்கி வைத்தார். கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, விடுதலை அமைப்பின் பொது செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் மனோஜ் பட்டாச்சாரியா, அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் தேவராஜன், மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர்.முன்னதாக, கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், மாநாட்டு வரவேற்புக்குழு தலைவருமான கே.பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். மாநில செயலாளர் சண்முகம், மதுரை தொகுதி எம்.பி. வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மதியத்துக்கு பிறகு பிரதிநிதிகள் மாநாடு நடந்தது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து வந்திருந்த ஏராளமான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.மாலையில் நடந்த கருத்தரங்கத்தில் சாலமன் பாப்பையா, சினிமா டைரக்டர்கள் ராஜூ முருகன், சசிகுமார் ஆகியோர் பங்கேற்றனர். வரலாற்று புகைப்படங்களின் கண்காட்சி, புத்தக கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், இடதுசாரி தலைவர்கள் குறித்த கருத்தரங்கம், தியாகிககள் சுடர் சங்கமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.இதனைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அகில இந்திய மாநாட்டின் 2-வது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. 'கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை' என்ற தலைப்பில் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு மாலை 5 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக மாநில வருவாய்த்துறை மந்திரி கிருஷ்ண பைரே கவுடா உள்ளிட்டோர் அதில் கலந்து கொண்டுள்ளனர். இந்த சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "கூட்டாட்சி என்ற சொல்லே மத்திய ஆட்சியாளர்களுக்கு அலர்ஜி ஆகிவிட்டது. மத்திய அரசால் அதிக பாதிப்பு அடைவது நானும், கேரள முதல்-மந்திரியும்தான். எங்கள் பேச்சுக்களை வாக்குமூலமாக எடுத்துக் கொள்ளலாம். மாநிலங்களை அழிக்கும் பாசிச பா.ஜ.க. ஆட்சியை ஒழித்தாக வேண்டும். தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என்ற சிலரின் நப்பாசை நிறைவேறாது. எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னர்கள் முழுநேர அரசியல் வாதியாக செயல்பட வைக்கிறார்கள், மாநிலங்களே இருக்க கூடாது என நினைக்கிறார்கள். வக்பு சட்டத்தை நள்ளிரவில் நிறைவேற்றி உள்ளார்கள். கூட்டாட்சி தத்துவத்தை தொகுதி மறுசீரமைப்பு மூலம் சிதைக்க நினைக்கிறார்கள். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டும்தான் இந்தியாவில் சுயாட்சி காப்பாற்றப்படும். சமத்துவ சமுதாயத்தை அமைக்கவே தேர்தல் கூட்டணியை அமைக்கிறோம்" என்று அவர் கூறினார்.
மூலக்கதை
