பிரதமர் மோடிக்கு தாய்லாந்து பிரதமர் கொடுத்த ஸ்பெஷல் கிப்ட்

  தினத்தந்தி
பிரதமர் மோடிக்கு தாய்லாந்து பிரதமர் கொடுத்த ஸ்பெஷல் கிப்ட்

பாங்காக்,தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்தியா, இலங்கை,வங்காள தேசம், நேபாளம், தாய்லாந்து, மியான்மர் மற்றும் பூடான் ஆகிய 7 நாடுகள் சேர்ந்து பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு கூட்டமைப்பை உருவாக்கி உள்ளது.ஆண்டுதோறும் இந்த கூட்டமைப்பில் உள்ள நாடுகள் இணைந்து செயல்படுவது குறித்து மாநாடு நடத்தி ஆலோசனை நடத்தப்படும். அந்தவகையில், இந்த ஆண்டுக்கான மாநாடு தாய்லாந்தின் பாங்காக்கில் இன்றும், நாளையும் நடக்கிறது. இந்தமாநாட்டில் கடல்சார், பாதுகாப்பு, சுற்றுலா விண்வெளி ஆய்வு, பயங்கரவாத தடுப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.இந்தநிலையில் பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று தாய்லாந்து புறப்பட்டு சென்றார். அங்கு அவர் அந்நாட்டு பிரதமர் பேடோங்டர்ன் ஷினாவத்ராவை சந்தித்தார். அப்போது இருவர் முன்னிலையிலும் இரு நாடுகளுக்கு இடையே பல துறைகளில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.இதனைதொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:-இந்திய மக்கள் சார்பாக, தாய்லாந்தில் கடந்த 28 ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்.நூற்றாண்டுகளை தாண்டிய இந்தியா தாய்லாந்து உறவானது, நமது கலாசாரத்திலும், ஆன்மிகத்திலும் வேரூன்றி உள்ளது. புத்த மதம் மூலம் இரு நாட்டு மக்களும் இணைக்கப்படுகின்றனர். எனது வருகையை நினைவு கூரும் வகையில் 18 ம் நூற்றாண்டின் ராமாயண சுவரோவிய ஓவியங்களை அடிப்படையாக கொண்ட சிறப்பு தபால் தலையை வெளியிட்ட தாய்லாந்து அரசுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தியாவும், தாய்லாந்தும் வளர்ச்சிக் கொள்கையை நம்புகின்றன. எல்லை விரிவாக்கக் கொள்கையை அல்ல. விசாரணை மற்றும் பாதுகாப்பு முகமைகள் தொடர்பான பேச்சசுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளோம். சைபர் கிரைம் குற்றங்களில் சிக்கிய இந்தியர்களை திருப்பி அனுப்பிய தாய்லாந்து அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தாய்லாந்து இடையே கல்வி, சுற்றுலா மற்றும் கலாசாரம் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது என முடிவு செய்துள்ளோம். வர்த்தகம், முதலீட்டை அதிகரிப்பது குறித்தும் ஆலோசித்து உள்ளோம் . கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள் துறைகளில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தங்களும் செய்யப்பட்டுள்ளன.இந்தியாவின் ஆக்ட் ஈஸ்ட் கொள்கை மற்றும் இந்தோ-பசிபிக் தொலைநோக்குப் பார்வையில் தாய்லாந்து சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. பிரதமர் ஷினவத்ரா தனக்கு திரிபிடகத்தை வழங்கி உள்ளார். புத்த பூமியான இந்தியாவின் சார்பாக, நான் அதை கூப்பிய கைகளுடன் ஏற்றுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக பிரதமர் மோடிக்கு தாய்லாந்து பிரதமர் கொடுத்த ஸ்பெஷல் கிப்ட் வழங்கினார். தாய்லாந்து பிரதமர் பெய்தோங்டார்ன் ஷின்வத்ரா பிரதமர் மோடிக்கு "The World Tipitaka: Sajjhaya Phonetic Edition" என்ற திரிபிடகத்தை பரிசாக வழங்கினார். திரிபிடகா (பாலியில்) அல்லது திரிபிடகம் (சமஸ்கிருதத்தில்) என்பது புத்தரின் போதனைகளின் புகழ்பெற்ற தொகுப்பாகும். இதில் 108 தொகுதிகள் உள்ளன. இது முக்கிய பௌத்த நூலாக கருதப்படுகிறது. பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பதிப்பு பாலி மற்றும் தாய் மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. இது 90 லட்சத்துக்கும் அதிகமான எழுத்துகளின் சரியான உச்சரிப்பை தீர்மானிக்கிறது. இந்த சிறப்பு பதிப்பு 2016 இல் தாய் அரசாங்கத்தால் உலக திரிபிடகா திட்டத்தின் ஒரு பகுதியாக மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் (ராமா IX) மற்றும் ராணி சிரிக்கிட் ஆகியோரின் 70 ஆண்டுகால ஆட்சியை நினைவுகூரும் வகையில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை