பாலம் திறப்பு: ராமேசுவரம் வரை 28 ரெயில் சேவைகள் மீண்டும் இயக்கம்

  தினத்தந்தி
பாலம் திறப்பு: ராமேசுவரம் வரை 28 ரெயில் சேவைகள் மீண்டும் இயக்கம்

சென்னை, ராமேசுவரத்தில் புதிய பாம்பன் ரெயில் பாலம் ரூ.550 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை, பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கிறார். முன்னதாக, பாலம் கட்டுமான பணி காரணமாக ராமேசுவரம் செல்ல வேண்டிய ரெயில்கள் மண்டபம் வரையில் மட்டுமே இயக்கப்பட்டது. இந்த நிலையில், ரெயில் பாலம் இன்று திறக்கப்பட உள்ளதால், மீண்டும் ரெயில்கள் ராமேசுவரம் வரையில் இயக்கப்பட உள்ளன. அந்த வகையில், ராமேசுவரத்தில் இருந்து திருச்சிக்கு நாளை (திங்கட்கிழமை) மதியம் 2.50 மணிக்கு விரைவு ரெயில் புறப்படுகிறது. மறுமார்க்கமாக, திருச்சியில் புறப்படும் விரைவு ரெயில் ராமேசுவரத்துக்கு நாளை பகல் 12.25 மணிக்கு வருகிறது.அதேபோல், ராமேசுவரத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு நாளை மாலை 5.30 மணிக்கு விரைவு ரெயில் புறப்படுகிறது. மேலும், கோவையில் புறப்படும் ரெயில் வருகிற 8-ந் தேதி காலை 6.15 மணிக்கு ராமேசுவரத்துக்கு வருகிறது. ராமேசுவரத்தில் இருந்து கோவைக்கு வருகிற 9-ந் தேதி இரவு 7.30 மணிக்கு விரைவு ரெயில் புறப்பட்டு செல்கிறது. ராமேசுவரம்-மதுரை பயணிகள் ரெயில் நாளை ராமேசுவரத்தில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக மதுரை-ராமேசுவரம் ரெயில் காலை 10.45 மணிக்கு ராமேசுவரம் வந்தடைகிறது. பின்னர், காலை 11.40 மணிக்கு மீண்டும் மதுரை புறப்பட்டு செல்கிறது. இவைகள் உள்பட மொத்தம் 28 ரெயில் சேவைகள் புதிய பாம்பன் பாலம் வழியே ராமேசுவரத்துக்கு இயக்கப்பட உள்ளன.

மூலக்கதை